நடுரோட்டில் பைக்கை நிறுத்தி வழிவிடாமல் அடாவடி தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை அடித்து உதைத்து ரோட்டில் வீசிய கும்பல்: வீடியோ வைரல்; 4 பேர் கைது

கும்பகோணம்: குடந்தையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்தி இடையூறில் ஈடுபட்டதை தட்டிகேட்ட அரசு பஸ் டிரைவரை மர்ம கும்பல் தாக்கி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு டவுன் பஸ் நே‌ற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (45) ஓட்டினார். கண்டக்டராக அரியலூர் மாவட்டம் டி.பழூரை சேர்ந்த செந்தில்குமார் (43) பணியில் இருந்தார். பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது இரவு 8 மணியளவில் கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே பஸ் வந்தபோது, சாலையில் இடையூறாக 2 பைக்குகளை நிறுத்திக்கொண்டு 10க்கும் மேற்பட்ட வாலிபர் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது டிரைவர் ரமேஷ், பைக்கை நகர்த்தும்படி ஹாரன் அடித்து கூறினார். இதில் அவர்கள் ஒரு பைக்கை மட்டும் நகர்த்திவிட்டு அதே இடத்தில் நின்றனர். இதனால் பஸ்சை நிறுத்திய டிரைவர், மற்றொரு பைக்கையும் நகர்த்தும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பஸ்சுக்குள்ளே ஏறி டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கி உதைத்தனர். இதனால் அச்சமடைந்த பயணிகள், அலறியடித்து கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.இந்த தாக்குதலில் ரத்த காயங்களுடன் நிலைகுலைந்த ரமேஷை மீண்டும் தாக்கி பஸ்சிலிருந்து கீழே தள்ளி உதைத்தனர். இதனால் வலி தாங்க முடியாத ரமேஷ் காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

அப்போது கண்டக்டர் தடுத்தும் அவரையும் அந்த கும்பல் தாக்கினர். அந்த நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், கும்பலின் அடாவடியை தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். இதை பார்த்த அந்த கும்பல் இருவரையும் சரமாரி தாக்கினர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டதால் அந்த கும்பல் பைக்குகளில் தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த டிரைவர் ரமேஷ், கண்டக்டர் செந்தில்குமார், செல்போனில் வீடியோ எடுத்த 2 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தியதில், டிரைவர், கண்டக்டரை தாக்கிய கும்பல் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் போதையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தன், கார்த்திகேயன், உதயகுமார் ஆகிய 4 பேரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நடுரோட்டில் பைக்கை நிறுத்தி வழிவிடாமல் அடாவடி தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை அடித்து உதைத்து ரோட்டில் வீசிய கும்பல்: வீடியோ வைரல்; 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: