போதைப்பொருள், தங்கத்தை விட வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல் அதிகரிப்பு: கருப்பு சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை; குருவிகளை வலைவீசி பிடிக்கும் அதிகாரிகள்

சென்னை: போதைப்பொருள், தங்கத்தை விட புதிய செட்டப்பில் அரிய வகை உயிரினங்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச கும்பல் துணையுடன் குருவிகளை வைத்து கடத்துபவர்களை வலைவீசி அதிகாரிகள் பிடித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை விமானம் மூலம் கடத்தி வரும் குருவிகளுக்கு சில லட்ச ரூபாய் வெகுமானம் வழங்கப்படுவதால், பலர் இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்து இங்கு விற்கும் பொழுது பல மடங்கு லாபம் கிடைப்பதால் தொடர்ந்து தங்க கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகளும் பல வழியில் முயற்சி செய்தாலும் தொடர்ந்து கடத்தல் நடைபெற்று தான் வருகிறது. அவ்வப்பொழுது சென்னை விமான நிலையத்தை மையப்படுத்தி பல கோடி மதிப்புள்ள தங்கம், போதை பொருட்களை கடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக அரிய வகை உயிரினங்கள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்த உயிரினங்கள் வெளிநாடுகளிலிருந்து குருவிகளின் உதவியுடன் கடத்தப்படுவதால் இதில் சர்வதேச பின்புலம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பால் பைத்தான் எனப்படும் அரிய வகை மலைப்பாம்பு முதல் முள்ளெலி, மர்மோசெட் போன்ற குட்டி குரங்கினங்கள், அந்த இனம் மாதிரியான லெமூர், பெரிய சிலந்தி, பேரோந்தி, பெரும்பல்லி வரை கருப்பு சந்தையில் பலகோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான தரகர்கள், வாக்குபவர்கள், விற்பவர்கள் என மிகப்பெரிய நெட்வெர்க் இயங்குவதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான விலங்குகளின் நேசர்களை குறிவைத்தே இதுபோன்ற கடத்தல்கள் ஜோராக நடத்து வருகிறது. அண்மை காலமாக விமான நிலையங்களில் அரிய வகை உயிரினங்கள் கடத்தல் என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
இந்த வகை கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சுங்கத்துறை அதிகாரிகள் தங்களின் முழு பங்களிப்பை அளித்தாலும் சில மர்ம கும்பல் எளிதாக உயிரினங்களை கடத்தி வந்து கருப்பு சந்தையில் கைமாற்றுவது தொடர்கதையாகி வருகிறது. தங்கம், போதைப்பொருட்கள் கடத்துவதை தாண்டி இந்த கடத்தல் மிகப்பெரிய லாபத்தை தருவதால் கைதேர்ந்த கடத்தல்காரர்கள் மற்றும் குருவிகளை கொண்டு கடத்தப்படுகிறது.

கடந்த ஓராண்டாக உலகளவில் நடக்கும் வர்த்தகத்தின்படி சுமார் ரூ.1.5 லட்சம் கோடி வரை இந்த அரியவகை உயிரினங்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், போதைப்பொருள், தங்க கடத்தலை தாண்டி அரிய வகை உயிரினங்களை கடத்துவது கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக குருவிகள் உதவியுடன் நடத்தப்படும் இந்த கடத்தல் சம்பவத்தில் சர்வதேச கும்பல் ஈடுபடுவது விசாரணையில் தெரியவருகிறது.

கடந்த 2 வாரங்களில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்பு ஆமைகளை கடத்தி வந்தவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்த உயிரினங்களை மருந்து பொருட்கள் தயாரிக்கவும், வீடுகளில் வளர்க்கவும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. மிடில் மேன் எனப்படும் வெளிநாட்டு தரகர்கள் மூலமாக சந்தையில் கைமாற்றப்படும் உயிரினங்களுக்கு இந்தியாவில் டிமாண்டு அதிகம் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. அரியவகை உயிரினங்கள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் துரிதநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

* 17 முறை கடத்திய நபர் சிக்கினார்
கடந்த ஓராண்டில் மட்டும் 17 முறை அரியவகை உயிரினங்கள் கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தது மட்டுமின்றி அவரிடம் இருந்து அரிய வகை குரங்குகள், பாம்புகள், ஆமை, எலி மற்றும் கடல் உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எந்த நாடுகளிலிருந்த கடத்தி வரப்பட்டதோ அந்த நாட்டின் அதிகாரிகளிடம் பேசி அவ்வகை உயிரினங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு கடத்திவரப்பட்ட அரிய உயிரினங்களின் பட்டியல்
உயிரினங்களின் வகைகள் எண்ணிக்கை
அமிலநேஸ்டிக் கான்பாம்பு 4
பால்பாத்தான் பாம்பு 53
பாலைவன எலி 12
உட்லேண்ட் டார்மவுஸ் 28
அணில் குரங்கு 2
கோல்டன் ஹான்ட் டாம்ரின் 2
பையரி அணில் 4
அணில் 4
வைட் காக்டூ 4
ப்ளூ இக்குவானா 50

The post போதைப்பொருள், தங்கத்தை விட வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல் அதிகரிப்பு: கருப்பு சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை; குருவிகளை வலைவீசி பிடிக்கும் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: