புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்

தஞ்சை: புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருநாளில் 15-வது நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி தினமும் சாமி புறப்பாடு மற்றும் , விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. தேர் காலை 7 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் வடம்பிடித்து இழுத்து துவங்கிவைத்தார். ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் அச்சு 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை 40 டன் ஆகும். தேர் வழக்கமாக மேலவீதி, வடக்கு வீதி, கீழராஜ வீதி, தெற்கு வீதி என 4 ராஜவீதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் நிறுத்தப்படும்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

The post புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: