வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி

க.பரமத்தி: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்து உள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூடாமணி ஊராட்சி ஊத்துப்பட்டி வாக்கு சாவடி மையத்தில் பாஜ மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வாக்கு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள் தான். வாக்காளர்கள் எங்கு இருந்தாலும் வாக்களித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். கோவையில் பாஜ சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி பணம் கொடுத்துள்ளதாக நிரூபித்தால், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகி விடுகிறேன். இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். இந்த தேர்தலை முழு நேர்மையாக வெளிப்படையாக அறம் சார்ந்து சந்தித்திருக்கிறோம். அனைவரும் ஜனநாயக கடைமை ஆற்ற வேண்டும். ஆளுபவருக்கும், நமக்கும் எப்போதும் தொப்புள்கொடி உறவு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* கோவையில் 1 லட்சம் வாக்குகள் மாயம்: தேர்தல் ஆணையம் மீது புகார்
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை, கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தை நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 20 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தற்போது, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்கள் கோவைக்கு வந்துள்ளனர். அவர்கள், வாக்களிக்க, வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவர்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லை. வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கோவை தொகுதியில் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும், தேர்தல் அதிகாரி சரியான பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையம், முறையாக பணி செய்யவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

The post வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: