சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது

தாரமங்கலம்: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 17வது வார்டு வெள்ளாளர் தெருவில், நேற்று மதியம் அதிமுகவினர் வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருப்பதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அப்ேபாது, வெள்ளாளர் தெருவில் உள்ள ராஜா என்பவரின் வீட்டிற்கு முன்பு, மூன்று பேர் வாக்காளர் பட்டியல், பூத் சிலிப் மற்றும் பணத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்த அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தாரமங்கலம் 17வது வார்டு அதிமுக செயலாளர் சண்முகம் மகன் சதீஷ் (34), அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் இளங்கோ(40), பணம் வைத்திருந்த மணி மகன் பிரபு(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ரேஷன் கடை தெருவில் நேற்று முன்தினம் இரவு சிலர் தேர்தல் விதிகளை மீறி வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அங்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த நபர்கள், பணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர், மர்ம நபர்கள் விட்டுச்சென்று பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.48,000ஐ பறிமுதல் செய்து அணைக்கட்டு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், அணைக்கட்டு அருகே நள்ளிரவில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த நபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். ஆனால், அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பெரிய ஊனை கிராமத்தை சேர்ந்த முரளி(35), சோமு(39), ஹரிகுமார்(35), போளூரை சேர்ந்த ராம்குமார்(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிந்து முரளி உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.

The post சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: