முதல்வர் ஜெகன் மோகன் மீதான தாக்குதல் தெலுங்கு தேசம் கட்சியினரை சிக்க வைக்க முயற்சி: சந்திரபாபு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மீது கல்வீச்சு வழக்கில் தன்னை சுற்றி பொறி வைக்க முயற்சிகள் நடப்பதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு குற்றம் சாட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மீது உண்மையில் யார் கற்களை வீசினார்கள், அதற்கான காரணங்கள் என்ன, உண்மைகள் என்ன என்பதை கூறாமல் உண்மையை மறைக்க அரசு முயற்சிக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களையும் வழக்குகளில் சிக்க வைக்கும் திட்டத்துடன் இந்த வழக்கு நகர்கிறது. இதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக சித்தரிக்க முழு முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விஜயவாடா மத்திய தொகுதி வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான போண்டா உமாவை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் பொய் வழக்குகள் போட்டு தேர்தல் பிரசாரத்தில் போண்டா உமா ஈடுபடவிடாமல் முயற்சி செய்கின்றனர். போண்டா உமா மீது பொய் வழக்குகளை சகித்துக் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே முதல்வர் ஜெகன் மோகன் மீது கல்வீசியதாக 17 வயது சிறுவன், துர்கா ராவ்(30) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் வேட்பாளர் போண்டா உமாவை ஆதரித்து பிரசாரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post முதல்வர் ஜெகன் மோகன் மீதான தாக்குதல் தெலுங்கு தேசம் கட்சியினரை சிக்க வைக்க முயற்சி: சந்திரபாபு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: