13 ஆவணங்களில் ஒன்றை அடையாள சான்றாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாளை நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில்

வேலூர், ஏப்.18: வாக்காளர்கள் வாக்களிக்க செலுத்துவதற்கான அடையாள சான்றாக வாக்காளர் அடையாள அட்டை உட்பட புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நாளை (19ம் தேதி) தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்துவதற்கான அடையாள சான்றாக தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் ஆதார் அட்டை, பான் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப்புத்தகங்கள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடையாள அட்டையை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

அதேபோல், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை அல்லது மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை என மேற்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குரிமையை வாக்காளர்கள் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post 13 ஆவணங்களில் ஒன்றை அடையாள சான்றாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாளை நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் appeared first on Dinakaran.

Related Stories: