பணத்தை பங்கு போடுவதில் தகராறு: பாஜ மாவட்ட தலைவரை தாக்கிய ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர்; சரி சமமாக பிரித்து கொடுத்த ஓபிஎஸ்; பாஜவினர் மறியல்

ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர், நேற்று முன்தினம் மாலை உப்பூர், திருபாலைக்குடி பகுதிகளில் பிரசாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் பரமக்குடியில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ரோடு ஷோ நடத்தியதால் இரவு நேரத்தில் உப்பூர், திருப்பாலைக்குடி பகுதிக்கு ஓபிஎஸ் சென்றார். அப்போது அப்பகுதியின் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் முத்துமுருகன், ஓபிஎஸ்சுடன் வந்த பாஜ மாவட்ட தலைவர் தரணி முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்துமுருகன், தரணி முருகேசனை தள்ளிவிட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

திடீரென இருவரும் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு முக்கியம் காரணம், கடைசி நேரத்தில் பணம் விநியோகம் செய்வதில் பாஜவினருக்கும், ஓ.பி.எஸ்.அணியினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைதான் இருவருக்கும் இடையே கை கலப்பில் முடிந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பாஜ மாவட்ட தலைவர் தாக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜ மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். ராமநாதபுரத்தைப் பொறுத்தவரை இரு பிரிவினவருக்கும் இடையே ஏற்கனவே யார் பெரியவர்கள் என்ற பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் தரணிமுருகேசனிடம் கடைசி நேர பண விநியோகத்தை கொடுக்காமல் ஓ.பன்னீர்செல்வம் அணியினரே செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பாஜவினர் பணத்தை சுருட்டி விடுவார்கள் என்று கூறி பணத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினரே வைத்துக் கொண்டனர். இதனால்தான் மோதல் ஏற்பட்டபோது, சாலை மறியலிலும் மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து முத்துமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது போலீசார் ஒன்றிய செயலாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜ மாவட்ட தலைவர் தரணி முருகேசன் வசிக்கும் கேணிக்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட பாஜவினர் கூடினர். அப்போது சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கேணிக்கரை போலீசார், அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

தொடர்ந்து தரணி முருகேசன் மற்றும் பாஜவினருடன் எம்பி தர்மர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பாஜவினர் அமைதியாகினர். தரணி முருகேசனை, பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். பின்னர் பணம் இரு தரப்பினருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே பிரச்னை சுமூகமான முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. பணம் பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் அணி, பாஜவினர் மோதி கொண்டது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பணத்தை பங்கு போடுவதில் தகராறு: பாஜ மாவட்ட தலைவரை தாக்கிய ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர்; சரி சமமாக பிரித்து கொடுத்த ஓபிஎஸ்; பாஜவினர் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: