3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ.400 கோடிக்கு மது விற்பனை.! அதிகாரிகள் தகவல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று மதியம் முதலே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும், நேற்று இரண்டரை மடங்கு அளவுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருந்தது. ஒரு நபருக்கு 4 குவார்ட்டர் மட்டும் வழங்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. அதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து கடைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒரு சிலர் கூடுதலாக மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20ம் தேதி திறக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மீண்டும் மூடப்படும். இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும், அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ.400 கோடிக்கு மது விற்பனை.! அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: