நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து; 6 வயது சிறுவன் உயிரிழப்பு…தந்தை படுகாயம்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தார். திருச்செங்கோடு அம்மையப்பர் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய சதீஸ்குமார், வர்ஷா தம்பதியினரின் 6 வயது மகன் பிரவீஸ். இன்று காலை சதீஸ்குமார் தனது மகன் பிரவீஸ் உடன் இருசக்கர வாகனத்தில் தோக்கவாடி பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த சமயம், இவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தானது கட்டுப்பாட்டை மீறி முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பிரவீஸ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி பேருந்தின் அடியில் சிக்கி கொண்ட சிறுவனின் தந்தை சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கை வெட்டப்பட்ட நிலையில் இருந்த சதீஷ்குமாரை அங்கிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காலை நேரத்தில் வேகமாக செல்லும் கல்லூரி பேருந்துகளால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக கூறி, அப்பகுதி மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர், மதுபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டிய மக்கள், அங்கிருந்த தடுப்புகளை இழுத்து சாலையில் போட்டனர். மேலும் அவ்வழியாக வந்த தனியார் பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், வேகத்தடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, பேருந்துகளை விடுவித்தனர். தொடர்ந்து, உடனடியாக அப்பகுதியில் வேகத்தடையும் அமைக்கப்பட்டது. முன்னதாக போராட்டத்தால் திருச்செங்கோடு – ஈரோடு சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து; 6 வயது சிறுவன் உயிரிழப்பு…தந்தை படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: