பாஜக, அதிமுகவை ஒருசேர வீழ்த்துவோம்!: நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

சென்னை: நாட்டை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்:

நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், திமுக கூட்டணி வேட்பாளர்களையும் பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு:

நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. ஏப்.19 நாட்டின் எதிர்காலத்தை தீரமானிக்கும் நாள். 10 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்திய பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்றுவதற்காக தேர்தல் இந்த தேர்தல். சாதி, மத வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்கு வலிமையான ஆயுதம் என குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசின் திட்டங்கள்:

திமுக அரசு பதவியேற்ற பிறகு 1.15 கோடி மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்க விடியல் பயணத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் குழந்தைகள் காலையில் பசியின்றி படிக்க காலை உணவுத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்களுக்கு வேலை தரும் நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்துகிறது. திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக, அதிமுகவை ஒருசேர வீழ்த்துவோம்:

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், மாநிலத்தை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க, தமிழையும், தமிழர்களை உண்மையாய் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வாக்களிப்போம் என்றார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முதல்வர் வேண்டுகோள்:

வடசென்னை – கலாநிதி வீராசாமி, தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயசூரியனில் வாக்களிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் – க.செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், வேலூர் – கதிர்ஆனந்த், தருமபுரி – ஆ.மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது வீடியோ பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post பாஜக, அதிமுகவை ஒருசேர வீழ்த்துவோம்!: நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: