பழம்பெரும் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான துவாரகேஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என கன்னட நடிகரும், தயாரிப்பாளரு, இயக்குனருமான துவாரகேஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான துவாரகேஷ் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் காலமானார். தயாரிப்பாளராக சுமார் 50 படங்களைத் தயாரித்து, நடிகராகவும் இயக்குனராகவும் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய துவாரகேஷ், கன்னட சினிமாவுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தார்.

செல்வத்திலும் அந்தஸ்திலும் உச்சத்தில் இருந்த துவாரகேஷ், அவர் தயாரித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார் என கூறப்படுகிறது. 19 படங்கள் தோல்வியடைந்ததாக இயக்குநர் துவாரகீஷின் உறவினர் பார்கவா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சினிமா மீது கொண்ட காதலால் துவாரகேஷ் மீண்டும் மீண்டும் படங்களைத் தயாரிக்க முடிவு செய்தார். இதனால், வங்கியில் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். ரூ.55 லட்சம் கடன் வாங்கியதால் வீடு, உடைமைகளை இழக்க நேரிட்டது. வீடு மட்டுமல்ல, அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த கார்கள், அனைத்தையும் இழக்க நேரிட்டது.

இதையடுத்து நோயால் பாதிக்கப்பட்டு வந்த துவாரகேஷ் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் காலமானார். கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகேஷ் மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் துவாரகேஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்; “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர்.. இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன.அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

The post பழம்பெரும் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான துவாரகேஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: