குட்கா வழக்கில் மாஜிக்களிடம் விசாரணைக்கு 3 ஆண்டாக அனுமதி கிடைக்கவில்லையா? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்று சொல்லி மூன்று ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்கப்பட்ட புகாரில் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022 நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆவணங்களை பார்த்த சிறப்பு நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்யது விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணைக்கான ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, கடந்த மூன்று ஆண்டுகளாக இதே பதிலை மட்டுமே தெரிவிக்கறீர்கள் என்று கண்டனம் தெரிவித்து, வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக சிபிஐ அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post குட்கா வழக்கில் மாஜிக்களிடம் விசாரணைக்கு 3 ஆண்டாக அனுமதி கிடைக்கவில்லையா? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: