ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்; தேர்தல் நேரத்தில் மோடி அரசுக்கு புது நெருக்கடி? பணவீக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

புதுடெல்லி: ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் மோடி அரசுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப் போருக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் தரப்பில் இஸ்ரேலை நோக்கி 300 ட்ரோன் ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன. ஈரான் தொடர் தாக்குதலை நடத்தினால், இஸ்ரேலை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும் என்று அப்பட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தான் புதிய போர் பற்றிய வதந்திகளும், செய்திகளும் உலாவுகின்றன. இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றமானது, இந்திய தேர்தலில் பிரச்னையாக மாறப் போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்தப் போர் பதற்றம் இந்திய தேர்தலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்த போர் பதற்றம் இந்தியாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம். இந்த போரானது இந்திய பணவீக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும். அதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். தேர்தல் நேரத்தில் பணவீக்கம் முக்கிய பிரச்னையாக மாறினால், அது இந்திய தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்துள்ளதாக ஒன்றிய பாஜக அரசு கூறிவருகிறது. ஆனால் போர் பதற்றத்தால் ஏற்படும் பணவீக்கம், ஒன்றிய பாஜக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி பார்த்தால், தற்போது உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 91 டாலராக உள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் நிலைமை மோசமடைந்தால், எந்த நேரத்திலும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர் வரை உயரலாம். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் தேர்தல் காலத்திலும் கடுமையான பணவீக்கத்தை மோடி அரசு சந்திக்க வேண்டியிருக்கும். பணவீக்கம் அதிகரித்தால், ‘இந்தியா’ கூட்டணி அதை பெரிய பிரச்னையாக்கும். மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை பலமுறை உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் அதே நிலை ஏற்பட்டால், தற்போது லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் உள்ள விலையானது மேலும் கடுமையாக உயரும். இன்னும் முதல்கட்ட வாக்குப்பதிவே தொடங்காத நிலையில், இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மோடி அரசுக்கு தேர்தல் நேரத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்; தேர்தல் நேரத்தில் மோடி அரசுக்கு புது நெருக்கடி? பணவீக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: