குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் உறுதி

 

காரியாபட்டி, ஏப்.15: குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், திருச்சுழி ஒன்றியம் மிதலைக்குளம், புளியங்குளம், கல்லூரணி, ரெட்டியபட்டி, பரளச்சி, மேலையூர், பூலாங்கல் மற்றும் காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த மந்திரி ஓடை, கல்லுப்பட்டி, புல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை நன்கு தெரிந்தவன். ராமநாதபுரம் தொகுதியில் இருக்கும் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் தேவையான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி தொகுதியை தன்னிறைவு அடைய செய்வேன். மக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

கிராம ஊராட்சிகள் மேம்பாட்டுக்காக ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவேன். மேலும் பெண்கள் சுகாதார வளாகம், சமுதாய கூடங்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொகுதி அளவிலான கல்வி வழிகாட்டும் மையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சி மையங்கள் அமைக்க பாடுபடுவேன்.

நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்’’ என்று தெரிவித்தார். பிரசாரத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.கே.சிவசாமி, மணிமேகலை, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், முத்துராமலிங்கம், முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: