பச்சைமலை புதூர் அருகே ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர தடுப்பு சுவர் பணி

துறையூர், ஏப்.15: திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்தில் பச்சைமலை வண்ணாடு ஊராட்சியில் உள்ள புதூர் மலைக்கிராமத்தில் இருந்து நாகூர் மலைக்கிராமம் செல்லும் நெடுஞ்சாலைத்துறை சாலை உள்ளது. கடந்த வருடம் பெய்த மழையில் இந்த சாலையில் சாலையை ஒட்டி மழை நீர் செல்லக்கூடிய வெள்ள தடுப்பு சுவர் பழுதடைந்தது. இதனால் சாலையின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையானது மேலும் சேதமடைந்து மலைப்பேருந்துகள் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. மலைவாழ் கிராம மக்களும் பச்சைமலைக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இது குறித்த தகவல்களை துறையூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.

திருச்சி கோட்டம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கண்ணன், துறையூர் உதவி கோட்டப் பொறியாளர் ஜெயராமன், உப்பிலியபுரம் உதவி பொறியாளர் ஜெயந்தி நளினா ஆகியோர்களின் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சாலைப்பணியாளர்கள் ஒப்பந்ததாரர் ஆகியோர்கள் சாலை தடுப்புச்சுவர் பணிகளை புதிதாக கட்டமைத்து வருகின்றனர். சாலையில் ஏற்கனவே இருந்த மழைநீர் வெளியேறும் பெரிய சிமெண்ட் குழாயை நீட்டித்து சுமார் ஏழு மீட்டர்கள் உயரத்தில் காங்கிரீட் கலவை கொண்டு வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மழைநீர் தாக்குதல் ஏற்படாத வகையில் வெள்ளத்தடுப்பு சுவர் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பணிகளை வரவேற்றனர்.

The post பச்சைமலை புதூர் அருகே ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர தடுப்பு சுவர் பணி appeared first on Dinakaran.

Related Stories: