முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி,யானை,சிறுத்தை, காட்டுமாடு,கழுதை புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய வகை வனவிலங்குகள், பிணந்தின்னி கழுகுகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன.
இந்நிலையில் மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில் உள்ள செந்நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வளர்ப்பு நாய்களிடம் இருந்து ஓட்டுண்ணி பூச்சிகள் மூலம் இந்நோய் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார், வன கால்நடை மருத்துவர் ராேஜஷ்குமார் மற்றும் வனத்துறையினர் செந்நாய்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றித்திரியும் ெதருநாய்களால் இந்நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளது. நோய் பாதித்த செந்நாய் கூட்டத்தை கண்காணிக்க பொக்காபுரம் பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.

வன ஊழியர்களும் விலங்குகளை கண்காணித்து வருகின்றனர்.நோய் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகையில், புலிகள் காப்பகம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் சுதந்திரமாக உலா வருவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பாதுகாக்கப்பட்ட வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் தெருநாய்களால் வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த விலங்கு பிறப்பு கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட செந்நாய்களை பிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளித்து விடுவிக்க வேண்டும், என்றனர்.

The post முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: