மக்களைக் கவர எப்படி இருக்க வேண்டும்?

வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவன்
மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது, ‘‘இவ்வளவு காலம் கொடுங்கோலனாக இருந்துவிட்டோமே, மக்களிடம் நல்ல பெயர் வாங்காமல் போய்விட்டோமே’’ என்று வருத்தப்பட்டான். அதை தன் மகனிடம் சொல்லி அழுதான். அவருடைய மகன் சொன்னான்.

‘‘நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களை நல்லவன் என்று இந்த மக்களை சொல்ல வைப்பது என் பொறுப்பு” என்றான். அரசன் இதை கேட்டு நிம்மதியாக இறந்துவிட்டான். அவனுடைய மகன் ஆட்சிக்கு வந்துவிட்டான். ஒரே வருடத்தில் அவனுடைய தந்தையை ஊர் மக்கள் புகழ ஆரம்பித்துவிட்டார்கள். காரணம், தந்தையைவிட இவன் மோசமாக கொடுங்கோலனாக நடந்து கொண்டதைப் பார்த்த மக்கள், ‘‘இவன் தந்தை எவ்வளவு நல்லவன் தெரியுமா!’’ என்று புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

இது ஒரு கதையாக இருந்தாலும், உளவியலைச் சொல்கிறது. இதை திருப்பி யோசித்தால், ஒருவன் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று சொன்னால், ஏற்கனவே நல்ல பெயரை எடுத்தவரைவிட அவன் அதிகமாக உழைக்க வேண்டும்.

மக்களைக் கவர எப்படி இருக்க வேண்டும்?

தனித்துவமாக இருக்க வேண்டும். இதேதான் தசரதன் விஷயத்திலும் நடக்கிறது. தசரதன், அற்புதமான ஆட்சி செய்தாலும், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன் என்றவுடன் மக்கள் ‘‘அதை முதலில் செய்யுங்கள். நாங்களே அதைச் சொல்லலாம்’’ என்று இருந்தோம். ஆனால், மகாராஜாவாகிய தங்களிடம் நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்? எங்கள் விருப்பமும் அதுதான் என்று சொல்ல ஆரம்பித்தவுடன், ஒரு பக்கத்தில் தசரதனுக்கு ராமனை இந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்களே என்கிற மகிழ்ச்சி. இன்னொரு பக்கம், தான் சிறந்த ஆட்சி அளிக்கும் போதே ராமனுடைய ஆட்சியை இவர்கள் விரும்புவதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள நினைத்தான். இதை வால்மீகி, தசரதன் வாயிலாகவே சொல்லுகின்றார்.
‘‘நான் சக்கரவர்த்தியாக இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், ராமனை அபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குக் காரணம் தெரியவில்லை. உண்மையாகச் சொல்லுங்கள்’’ என்று சொல்ல அவர்கள் சொல்லுகின்றார்கள்.‘‘மகாராஜா! மற்றவர்களிடத்தில் இல்லாத பல உத்தம குணங்கள் தங்கள் புத்திரனான ராமனிடத்தில் இருக்கின்றன’’ என்று ஆரம்பித்து, மக்கள் தாங்கள் அறிந்த ராமனை, தாங்கள் அனுபவித்த ராமனின் குணங்களை, தந்தையாகிய தசரதனுக்கே சொல்லுவதாக பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது ஏதோ ராமரைக் குறித்து எழுதிய வாசகங்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவனை தலைவனாக மக்கள் விரும்ப வேண்டும் என்று சொன்னால், அவர்கள் குணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் வால்மீகி இதிலே மறைமுகமாகப் பட்டியலிடுகின்றார். இந்தப் பட்டியல், ஒரு மனிதன் எவ்வளவு குணமுள்ளவனாகவும், பராக்கிரமம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.

1. ராமன் சாதாரண தர்மத்தையும், விசேஷ தர்மத்தையும் அறிந்தவன்.
2. தன்னைவிட எளிமையானவர்களிடத்திலே மனம் விட்டுப் பழகக்கூடியவன்.
3. பிறரிடத்திலே பொறாமை இல்லாதவன்.
4. மற்றவர்கள் குற்றங்களைப் பெரிது படுத்தாமல் பொறுத்துக் கொள்பவன்.
5. எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளைப் பேசுபவன்.
6. எல்லோருடைய நன்மைகளையும் சிந்திப்பவன்.
7. பிறருடைய துன்பங்களைத், தன்னுடைய துன்பமாக நினைப்பவன்.
8. யாராவது சிறு உதவி செய்து விட்டாலும், அதை பலரிடத்திலும் பெரிதாகப் பேசுபவன்.
9. தன்னை நம்பியவர்களை விட்டுப் பிரியாதவன். அவர்களைக் காப்பாற்றுபவன்.
10. வயதானவர்களையும், அறிவில் சிறந்தவர்களையும், எப்பொழுதும் வணங்குபவன்.
11. பிறருடைய ஆலோசனைகளைக் கேட்பதில் விருப்பமுள்ளவன்.
12. மிகுந்த பலசாலி.
13. எதிரிகளை அடக்குபவன்.
14. எல்லா விதமான அஸ்திர சாஸ்திரங் களையும் கற்றவன்.
15. விரதங்களை விடாமல் அனுசரிப்பவன்.
16. சங்கீதத்தில் மிகுந்த தேர்ச்சி உடையவன்.
17. மகா சுத்தன்.
18. எந்தக் கஷ்டத்திலும், கலங்காத மனம் படைத்தவன். கொடுத்த வாக்கை தவறாதவன்.
19. ஒரு தகப்பன், தன்னுடைய குழந்தைகளை விசாரிப்பதை போல், எல்லோருடைய நன்மைகளையும் எப்பொழுதும் விசாரிப்பவன்.
20. எல்லோருடைய நன்மை தீமைகளையும் விசாரித்து, அந்தந்த நிகழ்வுகளில் கலந்து கொள்பவன்.
21. ஒருவருக்கு ஏதேனும் சந்தோஷமான நிகழ்ச்சி நடந்தால், அவர்கள் அடைகின்ற சந்தோஷத்தைவிட கூடுதலான சந்தோஷத்தையும், ஒருவருக்கு துக்கம் நேர்ந்துவிட்டால் அவருக்கு நேர்கின்ற துக்கத்தைவிட அதிகமான துக்கத்தையும் அடைபவன்.
22. எத்தனை கஷ்டத்திலும் பொய் சொல்லாதவன்.
23. முகத்தில் புன்சிரிப்புடன் (ஸ்புரிதம்) பேசுபவன்.
24. எத்தகைய ஆபத்திலும், தர்மத்தையும், நியாயத்தையும் விடாதவன்.
25. ஒழுக்கத்தில் சிறந்தவன். எனவேதான், நாங்கள் ராமன் எங்கள் அரசனாக இருப்பதை கண்ணால் கண்டு அனுபவிக்க நினைக்கின்றோம்’’ என்று சொல்கின்றனர்.

இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

ராமாயணத்தில், ராமனைக் குறித்து வால்மீகி சொன்ன விஷயங்கள் என்று மட்டும் நினைக்காமல், நம்முடைய வாழ்வியலோடு பொருத்திப் பாருங்கள். மற்றவர்கள் விரும்பும் படியாக இருப்பதற்கு எத்தகைய குணங்களை ஒருவன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். குறிப்பாக, அவன் ஒரு நிறுவனத் தலைவனாகவோ அல்லது மக்களின் தலைவனாக விளங்க வேண்டும் என்று சொன்னால், உண்மையில் அவனுடைய குணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் ராமாயணம் மறைமுகமாக நம்முடைய வாழ்வியலுக்கு சொல்லுகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்பொழுது, தசரதனுக்குச் சந்தேகம் தீர்ந்தது. தான் மிக நன்றாக ஆட்சி செய்திருந்த பொழுதிலும், அதை ஏற்றுக் கொண்ட மக்கள், தங்கள் வாழ்நாளிலேயே ராமருடைய ஆட்சியையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதை அறிந்து ஆனந்தப்படுகின்றான். உடனே ராமனுக்குச் சொல்லி அனுப்புகின்றான்.

தேஜஸ்வி

The post மக்களைக் கவர எப்படி இருக்க வேண்டும்? appeared first on Dinakaran.

Related Stories: