இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

சத்தியமங்கலம், ஏப்.11: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக மாற்றப்படும் என சத்தியமங்கலம் அருகே அரசூர் பகுதியில் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.ராசா நேற்று ஈரோடு வடக்கு மாவட்டம் அரசூர், உக்கரம், செண்பகபுதூர், கோணமூலை, அரியப்பம்பாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அரசூர் பகுதியில் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரி தொகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். தற்போது 4-வது முறையாக நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி மக்களையும் நன்கறிந்தவன். ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது முன்பிருந்த எடப்பாடி அரசு கஜானாவை காலி செய்து 5 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றது. மேலும் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. மேலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகள். இவைகளை எல்லாம் சரிசெய்து தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகும்.

குறிப்பாக மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதையே எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார். அது உண்மையில் சத்துணவு திட்டமா என்பது தெரியவில்லை. ஆனால் வாரத்திற்கு 7 நாட்களும் முட்டை கொடுத்து உண்மையான சத்துணவு திட்டமாக கலைஞர் கருணாநிதி மாற்றினார். அதன்பின்னர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை பள்ளிக்கு வரும் பெரும்பாலான ஏழை எளிய குழந்தைகள் காலை உணவு உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்த உடனே உடனடியாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாட்டில் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் பல்லாயிரம் குழந்தைகள் தற்போது காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இதனை அறிந்த கனடா நாட்டு பிரதமர் அங்கும் இந்த காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். பிரதமர் அங்கும் இந்த காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு பிரபலம் அடைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்கிறார். அங்கிருந்து ரூ.8 லட்சம் கோடிக்கு முதலீடுகளை கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை கொண்டு வருகிறார். சென்னையில் கார் தயாரிப்பு தொழிற்சாலை கொண்டு வருகிறார். பெரம்பலூரில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டு வருகிறார். இதுபோன்று திட்டங்களை கொண்டு வந்து 30,000 மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வருகிறார்.

இதுபோன்று திட்டங்களை கொண்டு வந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வருகிறார். இது மட்டுமின்றி பல்வேறு புதிய திட்டங்களையும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இத்தனை திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் இந்த நாடாளுமன்ற தேர்தலின் போது உங்களை நோக்கி, இந்தியாவை பாதுகாக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்கிறார். காரணம் குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல இந்தியா மோடி கையில் சிக்கி சின்ன பின்னம் ஆகிக்கொண்டிருக்கிறது.

10 ஆண்டு காலம் அவரிடம் நாடு சிக்கி பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நாடுகளில் 142வது நாடாக உள்ளது. அவரிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றவே தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களை அழைக்கிறார். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், நாட்டை கூறு போட்டு மோடி அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என மாற்றும் நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருகிறார். மணிப்பூரில் இனக்கலவரம். அங்கு கிருத்துவ பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.

குஜராத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். ஆனால் கேட்பதற்கு நாதி இல்லை. டெல்லி முதல்வர் கேள்வி கேட்டார். அவரை சிறையில் அடைத்து விட்டனர். ஜார்க்கண்ட் முதல்வரும் கேள்வி கேட்டார் அவரையும் சிறையில் அடைத்து விட்டனர். ஜார்க்கண்ட் முதல்வரும் கேள்வி கேட்டார் அவரையும் சிறையில் அடைத்து விட்டனர். ஊடகங்கள் மீது அடக்குமுறை. ஆனால், மோடியை எதிர்த்து பேச கூடிய ஒரே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டுமே. எனவே, இந்தியாவை காப்பாற்ற, இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்ற எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஆ.ராசா பேசினார். தொடர்ந்து மோடி ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில் அதனை சுட்டிக்காட்டும் வகையில் மோடி சொன்னது போல பக்கவடை சுட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். செண்பகப் புதூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மோடி அரசை கண்டித்து திமுக வேட்பாளர் ஆ.ராசா இருசக்கர வாகனம் ஏற்றப்பட்ட மாட்டு வண்டியில் பயணம் செய்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில விவசாய அணி இணை செயலாளர் தர்மலிங்கம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் முத்துசாமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கேசிபி இளங்கோ, அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் வக்கீல் செந்தில்நாதன், அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் வி.என். சின்னச்சாமி, ராஜம்மாள், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.சி. வரதராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாக்கினாங்கோம்பை ஈஸ்வரன், உக்கரம் முருகேசன், கோணமூலை குமரேசன் (எ) செந்தில்நாதன், இண்டியம்பாளையம் செந்தில்குமார், செண்பகப்புதூர் ராசாத்தி, ஊராட்சி துணை தலைவர் சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக மாற்றப்படும் appeared first on Dinakaran.

Related Stories: