பாகூர் அருகே விதிமீறி சாராயம் விற்றவர் கைது

பாகூர், ஏப். 11: தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார், பறக்கும் படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மது கடத்தலை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானம், சாராயம் வழங்குவதை தடுக்கவும் புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மணமேடு பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக சிறப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரையாம்புத்தூர் போலீசாருடன் இணைந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணமேடு பாலத்தின் கீழே ஒரு கும்பல் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரித்ததில் அவர், மணமேடு பகுதியை சேர்ந்த அங்காளன் (41) என்பதும், திருட்டுத்தனமாக சாராய விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து (180 மி.லி) 374 சாராய பாக்கெட்டுகள், ரூ.4,650 பணம், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் இருக்கும். பின்னர் அங்காளனை கைது செய்து, சாராய பாக்கெட்டுகளை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

The post பாகூர் அருகே விதிமீறி சாராயம் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: