வடமாநிலங்கள் வழியாக வரும் புருளியா – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிப்பு

நெல்லை: வடமாநிலங்களுக்கு செல்லும் விழுப்புரம்- புருளியா எக்ஸ்பிரசை நெல்லை வரை நீட்டிப்பு செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்கிற தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது புருளியாவில் இருந்து விழுப்புரம் வரும் எக்ஸ்பிரசை நெல்லை வரை நீட்டிப்பு செய்து ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை மேற்கு வங்க மாநிலம் புருளியாவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. கோடை காலத்தின் அவசியம் கருதி இந்த ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புருளியாவில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.43 மணிக்கு புறப்படும் வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் (எண்.22605) புதன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை 4.10 மணிக்கு நெல்லைக்கு வந்து சேருகிறது.

இந்த நடைமுறை வரும் 12ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மறுமார்க்கமாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 3 மணிக்கு புறப்படும் நெல்லை-புருளியா வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (எண்.22606) வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 10.45 மணிக்கு புருளியா போய் சேருகிறது. இந்த நடைமுறை வரும் 17ம் தேதி புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், திருக்காவலூர், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக செல்கிறது. புருளியா எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிப்பு காரணமாக தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வடமாநிலங்கள் வழியாக வரும் புருளியா – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: