மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மொபைல் அடிக்‌ஷன்…அலெர்ட் ப்ளீஸ்!

மார்ச் ஆரம்பித்தாலே மகளிர் தினத்துக்கு அடுத்தபடியாக நமக்கு ஞாபகம் வரும் மற்றொன்று வெயில். ஏனென்றால் இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் தான் சூரிய ஒளியின் கால அளவு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் மார்ச் மாதம் ஆரம்பித்த உடனேயே வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்றும், அதனால் மக்களைப் பார்த்து, கவனமாக வெளியே செல்லுங்கள், தண்ணீர் அதிகமாக குடியுங்கள் என்றும், சில பொது இடங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் அல்லது நீர் மோர் கூட கொடுப்பார்கள். மேலும் ஊடகங்களில், நாளிதழ்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில் என்று பலதரப்பட்ட இடங்களிலிருந்து மக்களுக்கு வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட நம் நாட்டில், நம் ஊரில், நம் வீடுகளில் சூரியனைப் பார்த்து பல மாதங்கள் கடந்தும், பல வருடங்கள் கடந்தும் பார்க்காமல் இருக்கிறோம் என்று கூறும் நபர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். நம் மக்கள் அடிக்சன் என்ற வார்த்தையை, ஏதோ கவர்ச்சிகரமான வார்த்தை போல், நான் எல்லாம் காபிக்கு அடிக்சன், சிகரெட்டுக்கு அடிக்சன், திரைப்படங்களுக்கு அடிக்சன் என்று கூறும் போது, அதிலுள்ள பெருமையை அவர்கள் முகத்தில் சிறிதளவேனும் காண முடியும்.

அதே போல் தற்போது, ஒரு சிலர் மொபைல்க்கு கொஞ்சம் அடிக்சனாக இருக்கிறேன் என்றும், அவர்களே அடுத்த பதில் கூறுவார்கள், ஸ்க்ரீனிங் டைம் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்பார்கள். அவர்களின் கைக்குள் இருக்கும் மொபைல் மீது அடிக்சன் என்பதையும் பெருமையாக கூறி விட்டு, அடுத்த படியாக குறைக்கும் எண்ணத்தையும் கூறுபவர்களைக் காணும் போது, இன்றைக்கு குடித்து விட்டு, நாளைக்கு குடிக்கவே கூடாது என்று சத்தியம் பண்ணும் நபர்களைப் பார்ப்பது போல் இருக்கும்.

பொதுவாகவே அடிக்சன் என்ற எல்லைக்குள் செல்லும் வளர்ந்த மனிதர்களை மீட்பதே பெரிய சவாலாக இருக்கும். உண்மையாகவே தெளிவுபடுத்த வேண்டுமென்றால், எந்தவொரு அடிக்சனும் கட்டுப்படுத்த முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. தற்போது கொரோனாவுக்கு பிறகு, மாணவர்கள் மொபைல் அடிக்சனால் வீட்டை விட்டு, அதுவும் ரூமை விட்டுக் கூட வெளியே வர மாட்டார்கள் என்று பெற்றோர்களிடமிருந்து நிறைய புகார்கள் வருகிறது.

அப்படி ஒரு புகார் கலந்த ஒரு மாணவனை சந்திக்க நேர்ந்தது. பத்து அல்லது பனிரெண்டு வயதுக்குள் இருப்பான். அம்மா அப்பாவின் செல்லமான பையன். தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்துதான் பேச முடிகிறது. அவனைப் பார்க்கும் போது எதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறாய் என்று கேட்டேன். அவனே மிகத் தெளிவாக பதில் கூறினான். கடந்த நான்கு வருடமாக பள்ளிக்குப் போகவில்லை என்றும், ரூமை விட்டு வெளியே வரவில்லை என்றும், வாரத்துக்கு ஒரு தடவை தான் பல் விளக்குவேன் என்றும், மாதத்துக்கு ஒரு தடவைதான் குளிப்பேன் என்றும், அதோடு மட்டுமில்லாமல் ஹோட்டலில் ஜங்க் உணவுதான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு வந்தேன் என்றான். அதோடு மருத்துவமனைக்கு வரும் முதல் நாள் இரவு வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் உடைத்து இருக்கிறான். அதனால்தான் தன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் என்றான்.

நான்கு வருடமாக இப்படி அடைந்து கிடந்து இருக்க, ஏன் உங்க வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லையா என்று கேட்டதற்கு, அவர்கள் திட்டினார்கள், அடித்தார்கள், அவர்களால் அதற்கு மேல் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று தனக்குத் தெரியும் என்றான். மேலே கூறிய அனைத்தையும் மிகத் தெளிவாக, நிதானமாக அந்தப் பையன் கூறினான். உண்மையில் இப்படிப்பட்ட மாணவர்களின் பெற்றோரை நினைக்கும் போது, பரிதாபமாகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் உணர முடிகிறது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில பெற்றோர்கள் அதிர்ந்து கூட பேசத் தெரியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் உச்சரிப்பு கூட மிக மெல்லியதாக இருக்கும். அதனால் வீட்டிலுள்ள பிள்ளைகள், அவர்களின் பலவீனத்தை, தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது காலம் காலமாக இருக்கிறது என்பது இயல்பானதுதான். ஆனால் தற்போது அதன் தீவிரம் வேறு விதமாக பாதிக்கிறது.

இந்தப் பையனின் அம்மாவும் அதே போல்தான், அதிர்ந்து கூட பேச மாட்டார். அதனால்தான், அவர்களுக்கான நிரந்தர வேலை, நல்ல பதவி, சம்பளம் எல்லாவற்றையும் அந்தப் பையன் தனக்குச் சாதகமாக்கி கொண்டான். நன்றாக படித்து வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் ஒரு சிலர், அவர்களின் குழந்தைகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். வைரமுத்து அவர்கள் சொன்னது போல், சிலர் பிள்ளைகளை பெற்றெடுக்கிறார்கள், சிலர் பிரச்னைகளை பெற்றெடுக்கிறார்கள். பிரச்னையுள்ள பிள்ளைகளை மீறி பெற்றோர்கள் எதுவும் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

உண்மையில் அடிப்படையில் நமக்கு தெரிய வேண்டியது, பிறந்த குழந்தை முதல் 18 வயதாகும் மாணவர்களின் வளர்ச்சி என்ன மாதிரி இருக்க வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும். அதற்காக தான் கல்வித் துறையில் இருந்து தேசிய மற்றும் மாநில அரசின் கல்வி கொள்கைத் திட்டம் பற்றி அனைத்து பெற்றோர்களும் வாசிக்க வேண்டும் என்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் வீட்டிற்கும், சமூக வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானவர்கள். அதற்காக தான் அரசும், சமூகமும் அவர்களின் வளர்ச்சியில் உடல் மற்றும் மனம் சார்ந்து தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்கிறார்கள். அதன் அடிப்படை சாராம்சம் பற்றி கூறுகிறேன்.

* பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை சத்தான உணவு சார்ந்து இருக்க வேண்டும்.
* ஆறு வயது முதல் பத்து வயது வரை எண்ணும், எழுத்தும் தெரிந்திருக்க வேண்டும்.
* 11 வயது முதல் 15 வயது வரை அவர்களின் வளரிளம் பருவ வயது கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
* 16 வயது முதல் 18 வயது வரை அவர்களின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த வளர்ச்சிகள் நடந்திருக்க வேண்டும்.

இந்த வரிசையில் அடிப்படையில் தான் குழந்தைகளின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வளர்ச்சி இருக்கும் என்று கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்த மொபைல் சரியாக அவர்களின் 11 வயதிலிருந்து அவர்களின் சிந்தனையில் ஏற்படும் அதீத விபரீத கற்பனைகளுக்கு மொபைல் சரியான ஆயுதமாக தற்போது மாறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு வீடு, நண்பர்கள், சாப்பாடு, தன் மீதான சுய ஒழுக்கம் பற்றி முழுவதுமாக மொபைல் மூலம் மறக்கடிக்கப் படுகிறார்கள்.

அதற்கு ஏற்றாற் போல், கூகுள் மற்றும் யூ டியூப் மூலம் அவர்களுக்கானதை அரைகுறையாக தெரிந்து கொண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனம் சார்ந்து தெளிவாக பேசுகிறோம் என்று வீட்டிலுள்ளவர்களையும், அவர்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதனால் பெற்றோர்களும் பிள்ளை நன்றாகத் தான் பேசுகிறான், வீட்டிலே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். வீட்டிலே தொடர்ந்து மொபைலுடன் இருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனப்பாதிப்புக்கு ஆளாகும் போது, வீட்டிலுள்ளவர்கள் பயப்படுகிறார்கள். அதாவது ஒரு மாணவன் மனம் மற்றும் உடலளவில் முற்றிலும் சிதைந்து விடும் போது மட்டுமே, மனநல மருத்துவர்களைச் சந்திக்க முயற்சி செய்கிறார்கள். அதன் பின், மாதக் கணக்காக சிகிச்சை வேண்டுமென்று கூறும் போதும், ஏன் இத்தனை வருடங்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்தீர்கள் என்று கேட்டோமானால், அழுகையே பெரும்பாலும் பதிலாக இருக்கும்.

வளரிளம் பருவ வயதில் இருக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் சிந்தனைகளில் அதீதமான விபரீத எண்ணங்களும், கற்பனைகளும், கனவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சி வழங்க வேண்டும். அதற்கு உதாரணமாக நம் மாநில அரசு செய்யும் ஒரு முயற்சியை விவரிக்கிறேன். நமது ஆற்றங்கரை சார்ந்த ஊர்களில் நடத்தும் இலக்கியத் திருவிழாவில் மாணவர்கள் தான் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்துவதற்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைக்கதையாசிரியர்கள் இவர்களைப் பேச்சாளராக அழைத்து மாணவர்களிடேயே உரையாட வைக்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு மாணவனின் சிந்தனையில் இருக்கும் கற்பனைகளுக்கு கதைகள், காதல் கவிதைகள், குறும்படங்கள் எடுப்பதைப் பற்றி மேலே சொன்ன ஆளுமைகள் பேசும் போது, மாணவர்களால் மொபைலைத் தாண்டி, அவர்களின் கற்பனைகளுக்கு வேறு ஒரு உலகமும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். இதற்காக அரசும், இலக்கியச் சமூகமும் பெரும் முயற்சியை, செயலாக மாற்றி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மொபைல் அடிக்சனால் பாதிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கற்பனைக்கு தீனி கொடுக்கும் உலகத்தை நாம் காண்பித்து விட்டால் போதும், நம் வீட்டைச் சுற்றும் பூனையாக மாறி விடுவார்கள். அதுதான் சிறந்த சிகிச்சையாக என்றுமே இருக்கும்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: