மரபு கட்டுமானத்தை மீட்டெடுக்கும் பெண்

நன்றி குங்குமம் தோழி

கட்டிடக் கலைஞர் கிருத்திகா வெங்கடேஷ்

சொந்தமாக ஒரு வீடு என்பது எல்லோருக்குள்ளும் இருக்கும் கனவு. நமக்கான வீடு எப்படி இருக்க வேண்டுமென்கிற கற்பனையும் நமக்குள் எப்போதும் இருக்கும். ஆனால் எந்த மாதிரியான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி நமது கனவு வீட்டைக் கட்டப் போகிறோம் எனக் கேட்டால்..? அதற்கான பதில் எல்லோரிடத்திலும் பூஜ்ஜியம்தான்.நமது வீட்டுக்குள் காற்று நுழையவும்… உள்ளிருக்கும் வெப்பம் வெளியேறவும் ஏற்ற திறந்தவெளிகளை அமைக்கிறோமா என்று நாம் பார்ப்பதே இல்லை. சுருக்கமாக எவ்வளவு பெரிய பங்களா வீடாக இருந்தாலும், காங்கிரீட் கட்டிடத்திற்குள் ஏர் கண்டிஷன் இல்லாமல் வசிக்க முடியவில்லை.

மாற்று சிந்தனையாக மரபுக் கட்டுமானம் வழியே இயற்கையோடு இணைந்து மகிழ்ச்சியான… சுகாதாரமான வாழ்வை வாழ தீர்வு தருகிறார் கட்டிடக் கலைஞர் கிருத்திகா வெங்கடேஷ்.தான் கற்ற கல்வியும், செய்கிற செயலும் இப்படித்தான் இருக்க வேண்டும். இதன் வழியே என் மண்ணும், மக்களும் பயனுறனும் எனச் சிலர் தங்களைத் தாங்களே வடிவமைத்து செயலாற்றுவர். அதில் ஒருவர் கிருத்திகா. “ஸ்டுடியோ ஃபார் எர்த்தெர்ன் ஆர்க்கிடெக் ஷர்” என்கிற பெயரில் “மரபுக் கட்டுமான முறை”யினை மீட்டெடுத்து, எக்கோ ஃப்ரெண்ட்லி வீடுகளை வடிவமைப்பதுடன், தானே முன்னின்று கட்டியும் தருகிறார் இந்த மாடர்ன் ஆர்க்கிடெக்ட். அவரிடம் செய்த நேர்காணலில்…

மரபுக் கட்டுமானம் (Vernacular architecture) என்றால் என்ன?

நமது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கிற இயற்கைப் பொருட்களை, அதன் தன்மை மாறாமல் பயன்படுத்தி கட்டுகிற முறையே வெர்னாகுலர் ஆர்கிடெக்ட். சுருக்கமாக, இயற்கையோடு இணைந்து வீடு கட்டும் முறை. அடிக்கிற வெயிலுக்கு மின் விசிறியும், குளிர்சாதனப் பொருட்களும் இல்லாமலே நாம் வாழவும், மழை மற்றும் குளிர் காலத்தில் இதமான கதகதப்பை வழங்கியும் நமது வீடு நம்மை எப்போதும் அரவணைக்கும். இது ஒன்றும் புதுவிதமான தொழில்நுட்பம் கிடையாது. அடித்தளம் தொடங்கி, மேற்கூரை அமைக்கும் டெக்னிக் வரை முழுக்க முழுக்க சுண்ணாம்பு சார்ந்த கட்டுமானமே இது. சுண்ணாம்பு, மணல், கடுக்காய், பனை வெல்லம், கருங்கல், சக்கை கல் என கட்டுமானப் பொருட்களை இதில் பயன்படுத்துகிறோம்.
கட்டிடத்தைக் கட்டும் முறையும், கட்டிட வடிவமைப்பு முறையினை ஒட்டியே இருக்கும்.

கட்டிடம் கட்டுகிற முறை இதில் எவ்வாறு இருக்கும்?

இது முழுக்க முழுக்க கையால் செய்யும் முறை. எனவே கட்டுமானத் தொழிலாளர்களின் பணி இதில் மிகமிக முக்கியமானது. 10 முதல் 15 கட்டுமான தொழிலாளர்கள் (artisan) இணைந்தே பணிகளை எப்போதும் செய்வர். முதலில் சைட் விசிட் செய்து, மண் பரிசோதனை செய்த பிறகே கட்டிட வேலைகளைத் தொடங்குவோம். எந்த மண்ணிற்கு எந்த மாதிரியான கட்டுமானத்தைச் செய்யலாம். எது மாதிரியான அடித்தளத்தை போட வேண்டும். அந்த இடத்தின் சீதோஷ்ண நிலை, தரை காத்து, மேல் காத்து, நிலத்தின் தன்மை, காற்றோட்டம் எந்த திசையில் வருகிறது.

வெளிச்சம் உள்ளே வர எந்த மாதிரியான ஜன்னல்களை எவ்வளவு உயரத்தில் வைக்க வேண்டும். திறந்தவெளி இடம் எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை முதலில் முடிவு செய்வோம். அடித்தளம் அமைக்க, பூமிக்குக் கீழே வானம் தோண்டி வடிவமற்ற சக்கை கற்களை மண் சார்ந்த கலவையில் நிரப்புவோம். ஓரளவுக்கு சதுரமாக்கிய கட்டுக்கல் என்கிற கருங்கல்லை, சுண்ணாம்புக் கலவை இணைத்து நீரோட்டத்திற்கு ஏற்ற உயரத்தில் அடித்தளம் உயர்த்தப்படும். பிறகு அதன் மீது ஸ்டோன் ஸ்லாப்புகளை வைத்து, சுற்றுச் சுவற்றுடன் இணைக்கப்படும். கட்டிடத்தின் முனைப்பகுதி செங்கலுடன், செங்கல் வடிவில் செதுக்கிய சக்கை கற்களும் வைத்து லாக் செய்யப்படும்.

பிறகு கூரை அமைப்பதற்கு 400 முதல் 500 வருட பழமையான தொலாக் கட்டை முறை(Madras Terrace) பயன்படுத்தி கட்டைகளைப் பரப்பி, அதன்மேல் சித்துகற்களை குறுக்குவாக்கில் அடுக்கி, கடுக்காய், பனைவெல்லம் சேர்ந்த புளித்த கலவையுடன், வேகவைத்த சுண்ணாம்பு சேர்த்து பசையாக்கி மேற்கூரை அமைக்கப்படும்.இடிக்கப்பட்ட பழைய வீடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட மர ஜன்னல்கள், கதவுகள், தூண்களை முந்திரி கொட்டை எண்ணெய் தடவி பதப்படுத்திய பிறகே மீண்டும் பயன்படுத்தப்படும். பி.டபிள்யூ.டி ஆராய்ச்சியின்படி, இந்த கட்டிடங்களின் உறுதிக்கு 150 ஆண்டுகள்வரை சொல்லலாம்.

கட்டிடத்தில் ஈக்கோ ஃப்ரெண்ட்லி என எதைச் சொல்கிறீர்கள்?

எந்த இடத்தில் எப்படியான வடிவில் வீட்டைக் கட்டுகிறோம். இந்த இடத்தில் வீடு கட்டலாமா கூடாதா என்பதையும் சேர்த்தே ஈக்கோ ஃப்ரெண்ட்லி. ஓரிடத்தில் வீடு கட்ட முயற்சிக்கும்போதே அங்கிருக்கும் மண்ணின் தன்மை? எந்த அளவுக்கு இந்த மண் கனத்தை தாங்கும்? ஈரப்பதம் எப்படியிருக்கிறது? காற்றோட்டம் எந்த திசையில் இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய ஜன்னல்களை வைக்கலாம். சுற்றுவட்டாரத்தில் எந்த மாதிரியான கட்டுமானப் பொருட்கள் கிடைக்கிறது எனவும் பார்க்க வேண்டும்.

கட்டுமானப் பொருட்களின் கூறுகள் ஊருக்கு ஏற்ப மாறுபடும். அந்தப் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களை வைத்து, அங்கு இருக்கும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற வீட்டைக் கட்ட வேண்டும். உதாரணத்திற்கு தஞ்சாவூரின் காவிரி ஆற்றுப்படுகையோரம் குடியிருப்போர் அதற்கு ஏற்றமாதிரியான அடித்தளங்களை, கட்டுமானப் பொருட்களையும் அமைத்திருப்பார்கள். சென்னை மாதிரியான பெருநகரத்தின் நெருக்கடிகளில் வாழ்ந்துவிட்டு நமது சொந்த ஊர்களுக்குச் செல்லும்போதுதான், என்ன மாதிரியான விஷயங்களை இழந்து நிற்கிறோம் எனத் தெரியவரும். 50 வருடம், 100 வருடம் பழமையான நமது வீடுகளுக்குள் இன்றைக்கும் குளிர்ச்சி இருக்கும். மின் விசிறி இல்லாமல் தூங்க முடியும். அப்படியென்றால் எதை நாம் இழந்தோம்?

தொழில் புரட்சிக்கு முன்புவரை மண், மணல், வேக வைத்த சுண்ணாம்பு, பழைய மரங்கள், முட்டையின் வெள்ளைக் கரு, ஊற வைத்த வெந்தயம், புளித்த தயிர் நீர், கற்றாழை இவைதான் முக்கியமான கட்டுமானப் பொருட்களாக புழக்கத்தில் இருந்தது. மரங்கள் அனைத்தும் 35 ஆண்டு முதல் 60 ஆண்டுவரை நன்கு வளர்ந்து வைரம் பாய்ந்த கட்டைகளாக இருந்தன. இவை அத்தனையுமே ஈக்கோ ஃப்ரெண்ட்லிக்கான கூறுகள்தான்.ஈக்கோ ஃப்ரெண்ட்லி கட்டுமானத்தில் நாங்கள் கம்பி, அலுமினியம், இரும்பு, கண்ணாடி, எம்.சாண்ட், சிமென்ட், பாக்ஸைட், வார்னிஷ், பெயின்ட் உட்பட எந்த கெமிக்கல் சார்ந்த கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை.

மரபுக் கட்டுமான முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?

மாடர்ன் மெட்டீரியல்ஸ் சந்தைகளில் அதிகம் வருவதால், புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் சூழலுக்குப் பொருந்தாத க்ளாஸ் மெட்டீரியல்ஸ், அலுமினியம் பேனல்ஸ், அயர்ன் மெட்டீரியல்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக ஒன்றைப் பயன்படுத்துகிறேன் என்பதைத் தவிர்த்து, எனக்கிது ஆரோக்கியத்தைத் தருகிறதா? மகிழ்ச்சியாய் வீட்டிற்குள் வாழ முடிகிறதா எனவும் பார்க்க வேண்டும்.

நாம் பயன்படுத்தும் பெயின்ட், வார்னிஷ் மற்றும் கெமிக்கல் கலந்த கட்டிடப் பொருட்களை சுவாசித்துக் கொண்டே நீண்ட நேரத்தை வீட்டுக்குள் செலவு செய்கிறோம். என் வாழ்க்கை முறை, என் உணவுப் பழக்கம் இவற்றைத் தாண்டி, நான் என் வீட்டுக்குள் சுழலும் காற்றையும் தினம்தினம் சுவாசிக்கிறேன். சுகாதார வாழ்வுதரும் கட்டுமானப் பொருட்களைத் தவிர்த்து, அழகுக்காகவும், அவசரத்திற்காகவும் குறைந்த வாழ்வு தரும் கட்டுமானப் பொருட்களை, வெப்பத்தை வெளியேற்றாத கட்டுமானப் பொருட்களை ஏன் நாம் பயன்படுத்த வேண்டும்? என்கிற கேள்வி இயல்பாய் எனக்குள் எழுந்தது.

ஒரு அபார்ட்மென்டிற்குள் நுழைவது காங்கிரீட் காடுகளுக்குள் நுழைவது மாதிரி. சுற்றிலும் மரங்கள் இருக்காது. சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜன் இருக்காது. மிக ஆழத்தில் இருந்து வரும் கடினமான தண்ணீரை பயன்படுத்த முடிவதில்லை. பூமியின் இரண்டாவது மிகப்பெரிய அழிவுசக்தி கட்டிடக் கழிவுகளில் இருந்து வெளியேறும் காங்கிரீட். சிமென்ட் தொழிற்சாலை, பாக்ஸைட் தொழிற்சாலை, மணல் குவாரி இதெல்லாம் கட்டுமானத் தொழிலில் மிகப் பெரிய ரோல் செய்து, சூழலியல் சீர்கேடுகளை ஏற்படுத்த காரணமாக இருக்கின்றது.

இயற்கை நமக்கு என்ன கொடுத்திருக்கோ அதை வைத்தே வீடு கட்டும் முறையில் இருந்து வெளியில் வந்து அதனை மாற்ற முயற்சிக்கிறோம். அப்போதுதான் நிறைய பிரச்னைகளை மனிதன் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதான் மரபுக் கட்டுமானத்தை நான் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம்.

ஒரு பெண் தலைமையேற்று கட்டுமானத் தொழிலுக்குள் வருவது சுலபமா?

வானமே எல்லை!! எவ்வளவு உயரத்திற்கும் பறக்கலாம். கடந்த 6 வருடங்களாக நான் இதில் இருக்கிறேன். ஆர்க்கிடெக்ட் என்றால் அலுவலகத்திற்குள் மட்டுமே வேலை செய்வது. அதையும் தாண்டி நான் சைட்டிற்குள் நுழைந்து வேலை செய்வது துவக்கத்தில் சவாலாகத்தான் இருந்தது. அதிலும் மரபு சார்ந்த கட்டுமானத்தைக் கட்டித் தருவது அத்தனை சுலபமில்லை. நான் இருப்பது சென்னை. என்றாலும், எந்த ஊரில் இருந்து வந்து என்னிடம் மரபுக் கட்டுமானத்தில் வீடு கட்டித் தரச்சொல்லிக் கேட்டாலும் என்னால் அந்த இடத்திற்கே வந்து வீட்டைக் கட்டித்தர முடியும். இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மணப்பாக்கம், திருத்தணி, காஞ்சிபுரம், வேலூர் தவிர்த்து திருப்பதி, பூனே என மாநிலம் கடந்தும் மரபு முறையில் வீடுகளைக் கட்டி கொடுத்திருக்கிறேன்.

மரபுக் கட்டுமானத் தொழிலில் மிக முக்கிய ரோல் செய்பவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களே. அவர்களை மதித்து, அவர்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுத்து, அவர்களுடன் நட்போடு பழகித் தொழில் செய்வதால்தான் இந்தத் தொழிலை என்னால் சிறப்பாக கொண்டு போக முடிகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: கௌதம்

The post மரபு கட்டுமானத்தை மீட்டெடுக்கும் பெண் appeared first on Dinakaran.

Related Stories: