நன்றி குங்குமம் தோழி
எல்லா பெண்களுக்கும் அவர்கள் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைப்பதில்லை. குடும்பச்சூழல், பொருளாதாரம், கட்டுப்பாடு காரணமாக சில வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கும். நாளடைவில் பொருளாதாரம் அளவில் தங்களை மேம்படுத்திக் கொண்ட பெண்கள் தங்கள் விருப்பங்களை தாங்களே மெல்ல மெல்ல நிறைவேற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். கல்வி முதல் ஆடை அணிகலன் என அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொண்டார்கள். அதில் மிகவும் முக்கியமான கனவு இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது.
இன்று பெண்கள் பலர் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். அவ்வாறு ஓட்டும் போது இண்டிபெண்டென்டாக உணர்கிறார்கள். ஆனால், அதிக கனரக கியர் வசதி கொண்ட இரு சக்கர வாகனங்களை ஒரு சிலர் மட்டுமே ஓட்டுகிறார்கள். விருப்பம் இருந்தாலும் அதை தங்களால் மேனேஜ் செய்ய முடியுமா என்ற தயக்கம் இருக்கும். அதை நீக்கி பெண்களுக்கு கியர் மோட்டார் வாகனங்கள் பயிற்சிகளை தந்து ஊக்குவித்து வருகிறார் அபிஷேக் சரவணன். இவரின் ‘கஃபே குரூசர்ஸ்’ நிறுவனம் மூலம் பெண்களுக்கு கியர் இரு சக்கர வாகன பயிற்சியினை அளித்து வருகிறார். கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாட்கள் பயிற்சிக்கு நடுவே அபிஷேக்கிடம் பேசினோம்.
‘‘எனக்கு சொந்த ஊர் ஈரோடு. ஆனால், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர்லதான். அப்பா இணைய சேவை நிலையம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அம்மா இல்லத்தரசி. நான் பி.எஸ்சி., எம்பிஏ பட்டதாரி. 2022ல் கூகுளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அசோசியேட்டாக வேலை கிடைத்தது. ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேல் என்னால் கார்ப்பரேட் துறையில் ஈடுபட முடியவில்லை. எனக்கு மோட்டார் வாகனங்கள் மீதுதான் ஆர்வம் இருந்தது. மோட்டார் சைக்கிள்கள் இயக்கும் பெரிய சமூகம் என்னால் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆர்வமாக இருந்தது’’ என்று அது குறித்து பகிர துவங்கினார்.
‘‘நான் 2024ல் கூகுள் கம்பெனியை விட்டு வெளியே வந்தேன். ‘கஃபே குரூசர்ஸ்’ – பைக் ரைடிங் கம்பெனியை தொடங்கினேன். டெக்னாலஜி மற்றும் ரைடிங் அனுபவங்களை ஒன்றிணைக்கும் ஓர் இடமாக எங்கள் நிறுவனம் இயங்கி வருகிறது. எங்க நிறுவனம் பற்றி கேள்விப்பட்டதும், ஆண்களை விட பெண்களே இரு சக்கர வாகனங்களை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், பெண்களுக்கு சொல்லித் தரும் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சியாளர், பாதுகாப்பான சூழல் அமையாததால் எங்களால் பயிற்சியினை துவங்க முடியவில்லை. இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் பயிற்சியினை துவங்கினோம். பெண்களுக்கு தன்னம்பிக்கை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான பயணம் தரக்கூடிய அளவில் எங்கள் பயிற்சி இருப்பதால் ஏராளமான பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
என்னைப் பொறுத்த வரை ‘பைக் ரைட்’ என்பது டிரான்ஸ்போடேஷன் கிடையாது. அது ஒரு சுதந்திரம். ஒரு பெண் பைக் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது தனக்குள் இருக்கும் பயத்தை ஜெயித்து, தன்னையே நம்ப ஆரம்பிக்கிறாள்’’ என்றவர் பயிற்சி அளிக்கும் முறைகளைப் பற்றி விளக்கினார். ‘‘எங்கள் ஆரம்ப நிலை பயிற்சியானது வண்டியை பேலன்ஸ் செய்வது, கிளட்ச் மற்றும் பைக்கினை கன்ட்ரோல் செய்வது என்ற முறையில் இருக்கும்.
அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளை கையாள்வது, பிரேக்கிங் மற்றும் டிராபிக் குறித்து பயிற்சி அளிப்போம். அதனைத் தொடர்ந்து குழுவாக செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சாலை ஒழுக்கங்களை சொல்லித் தருவோம். வண்டியின் உதிரி பாகங்கள் குறித்த தகவல்கள், அதை பாதுகாக்கும் முறைகள், அவசர காலங்களில் வாகனத்தை கையாளும் முறை என அனைத்தும் இந்தப் பயிற்சியில் கற்றுத் தருகிறோம். பைக் ஓட்டவே தெரியாமல் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர் அமைத்து தனி கவனம் செலுத்துகிறோம்.
தற்போது கோவையில் மட்டுமே பயிற்சி வழங்கி வருகிறோம். பயிற்சி முடிந்ததும் அவர்கள் இயல்பான போக்குவரத்து உள்ள சாலைகளில் ஓட்ட தயாராகிவிடுவார்கள். எங்களிடம் கல்லூரி மாணவிகள் முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். நம்பிக்கை, சுதந்திரம், வாழ்க்கை மாற்றம் கொடுத்து பயத்தை போக்குவதாக அவர்கள் கூறும் போது நிஜமாகவே பெருமிதமாக உணர்கிறேன். ரைடிங்கிற்கு வயது என்பது தடையே இல்லை. எந்த வயதிலும் பெண்களின் ரைடிங் ஆசைகளை நிறைவேற்றித் தர நாங்க தயாராக இருக்கிறோம்’’ என்று நம்பிக்கையுடன் பேசிய அபிஷேக் சரவணனைத் தொடர்ந்தார் முக்கிய பயிற்சியாளர் சுவாதி.
‘‘என்னுடைய ஊர் கோயம்புத்தூர்தான். நான் அடிப்படையில் பிட்னஸ் டிரெயினர். எனக்கு புதிய இடங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து பயணம் செய்ய, குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்ல பிடிக்கும். அது எனக்கு ஒரு வித மன அமைதி மற்றும் சுய சார்பு உணர்வை தரும். என்னைப் போல மற்ற பெண்களும் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திரமாக பயணிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் நான் இவர்களுடன் இணைந்து பயணிக்கிறேன்.
இரு சக்கர வாகனங்கள் குறிப்பாக கிளட்ச் பயன்பாட்டுடன் உள்ள வாகனங்களை பெண்கள் ஓட்டி, நன்கு தேறிய பிறகு அவர்கள் ஒரு குழுவாக இணைந்து ரைடிங் கம்யூனிட்டியை உருவாக்க இவர்கள் வசதி ஏற்படுத்தி தருகிறார்கள். அது எனக்குப் பிடித்திருந்தது. அதற்காகவே நான் பயிற்சியாளராக இங்கு சேர்ந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற பெண்கள் வாகனம் ஓட்டுவதில் ஏற்பட்ட பயம் மற்றும் பதற்றம் குறைந்து மன உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கும் போது ஒரு பெண்ணாக மற்ற பெண்களை உயர்த்தி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. வேலைக்கு செல்லும் பெண்களை விட இல்லத்தரசிகள் வாகனம் ஓட்ட முன் வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’’ என்றார் சுவாதி.
‘‘எங்களின் இரண்டு நாள் பயிற்சியில் பைக், பாதுகாப்பு உபகரணங்கள், கிளவுசஸ், சேஃப்டி கீர்ஸ் ஆகியவற்றை தந்து சான்றிதழ்களும் வழங்குகிறோம்’’ என்றார் அபிஷேக். ‘‘தற்போது இரண்டு பெண் பயிற்சியாளர்களும் நான்கு ஆண் பயிற்சியாளர்களும் இருக்கின்றனர். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட ரைடர்களை உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் பெண்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியை விரைவில் இந்தியாவின் டயர் -1 நகரங்களான பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே போன்ற இடங்களில் விரிவுப்படுத்த இருக்கிறோம். அதற்காக நாங்க குழுவாக உழைக்கிறோம்’’ என்றவர், ஐந்தடிக்கு குறைவானவர்களை கூட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை இயக்க வைத்துள்ளதாக பெருமிதம் கொள்கிறார் அபிஷேக் சரவணன்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: சதீஷ் தனபாலன்
