கோல்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு உண்மையான நண்பன்!

தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களுடன் நட்பாகவும் அன்பாகவும் பழகி, சைகை மொழியில் பேசுவதை மிகச்சரியாக புரிந்து கொண்டு தன் செயல் மூலம் பதிலாக வெளிப்படுத்துகிறது கோல்..! ஆம், கோல் ஒரு மாற்றுத்திறன் கொண்ட நாய். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள வின்லாண்ட் நகரின் பள்ளிகளிலும் சமூகத்திலும் மிகுந்த நேசத்தையும் மரியாதையையும் பெற்ற ஒரு சூப்பர் ஹீரோவாக கோல் இருந்து வருகிறது.

பிறந்ததிலிருந்தே காதுகேளாமல் இருந்தாலும், மற்ற மனிதர்களை ஊக்கப்படுத்தும் ஒரு அழகான கதையாக தனது வாழ்க்கையை அமைத்துள்ளது. 2017ம் ஆண்டு தெற்கு ஜெர்சி பகுதியில் பிராந்திய மிருக பாதுகாப்பு மையத்திலிருந்து இசை ஆசிரியரான கிறிஸ்டோபர் ஹன்னா என்பவர் கோலை தத்தெடுத்துள்ளார். இதன் காதுகேளாமை காரணமாக கோலை தத்தெடுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் கிறிஸ்டோபர் முதல்முறையாக கோலை சந்திக்கும் போது, காதுகேளாத சிறுவனான தன் உடன்பிறந்தவரின் மகன் நினைவுக்கு வரவே, கோலின் நிலையை தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்பதால், அவர் கோலை தத்தெடுத்துள்ளார். கிறிஸ்டோபர் அதனுடன் சைகை மொழியில் பேசத் தொடங்கியுள்ளார்.

கோல் ஒரு சான்றளிக்கப்பட்ட ஆலோசனை நாயாக, டாக்டர் வில்லியம் மேன்னிஸ் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுடன் பணியாற்றுகிறது. அங்குள்ள குழந்தைகளுக்கு பரிவு, தன்னம்பிக்கை, தன்னை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற மனித பண்புகளை வளர்க்க உதவி வருகிறது. தன்னைப் போலவே சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுடன் பேசும்போது, அவர்கள் தனியாக இல்லை என்ற உணர்வை கொடுக்கிறது. கோல் பள்ளிக்குள் மட்டுமல்லாமல், முன்னாள் ராணுவ வீரர்களின் இல்லங்களிலும், ஹாஸ்பைஸ் மையங்களில் உள்ள முதியவர்களுக்கு மன அமைதி மற்றும் ஆறுதல் வழங்குகிறது.

அதன் இயல்பான அமைதியும் அழகான அணுகுமுறையும் பலரின் மனதையும் நெகிழச் செய்கிறது. கோலின் சமூக ஊடக காணொளிகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. சமீபமாக தனது 9வது பிறந்தநாள் கொண்டாடிய கோலுக்கு, குழந்தைகள் சைகை மொழியில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் தருணம் பலரையும் கவர்ந்தது.தனது தூய மனம், மென்மையான பண்பு மற்றும் அன்பின் மூலம், கோல் பலருக்கும் நம்பிக்கைச் சின்னமாக மாறியிருக்கிறது. கோல் ஒரு சாதாரண காதுகேளாத நாய் அல்ல, மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்ட ஒரு உண்மையான நண்பன்!

தொகுப்பு: ஆர்.ஆர்

Related Stories: