நன்றி குங்குமம் தோழி
வேண்டாமெனத் தூக்கியெறியும் செய்தித்தாள்களை அழகிய கருப்பு நிற ஆப்ரிக்க பொம்மைகளாய் மாற்றுகிற மாற்றுத்திறனாளிப் பெண் ராதிகா. இவர் செய்வது அப்சைக்கிளிங் கலை வடிவம். சுருக்கமாக குப்பையிலிருந்து புதையல்.நமக்கெல்லாம் ரீசைக்கிளிங் தெரியும். அதென்ன அப்சைக்கிளிங் என்கிறீர்களா..? தூக்கி எறிந்த ஒரு பிளாஸ்டிக் பொருளை, அரைத்து கூழாக்கி, அதன் தன்மையை மாற்றி, வேறொன்றாக உருவாக்குவது ரீசைக்கிளிங். அப்சைக்கிளிங் என்பது, பொருளின் மூல வடிவத்தை மாற்றாமல், மதிப்பைக் கூட்டுவது. ஆம்! ராதிகா செய்தித்தாள்களை கூழாக்கவில்லை. செய்தித் தாள்களை டியூப்ஸாக சுருட்டி, வளைத்து, ஒரு உருவத்தை உருவாக்குகிறார். இதுதான் ஆப்ரிக்க பேப்பர் பொம்மைகளின் சிறப்பு.
ஒரு சின்ன முகநூல் பதிவு வழியே தொடங்கிய பயணம் ராதிகாவுடையது. இன்று நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், சன் டிவி, சூரியன் எஃப்.எம். என பல பெரிய ஊடகங்களின் கவனம் ஈர்த்திருக்கிறார். ஆம்! ராதிகாவின் வெற்றிப் பக்கங்களை பல்வேறு ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்த அங்கீகாரம் மூலமாக இந்தியா மட்டுமின்றி, யுகே., யுஎஸ், கனடா என பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகிறது. இன்று வீட்டில் இருந்தே தன் தொழிலை வெற்றிகரமாய் நடத்தி வருகிறார் ராதிகா.
கனடாவிலிருந்து வந்த சுற்றுலா பயணி ஒருவர், ‘கோயில் கருவறையில் இருக்கிற சாமி கருப்புதானே. அதைத்தானே அலங்கரித்து பூஜை செய்கிறோம். அது போலத்தான் உங்களோட பொம்மைகளையும் பார்க்கிறேன்’ எனச் சொல்ல, தொடக்கத்தில் கருப்பு நிற பொம்மையா? என ராதிகா தயங்கி விஷயம் மாற ஆரம்பிக்க, நம்பிக்கையோடும்… பெருமையோடும்… ஆப்ரிக்க கருப்பு பொம்மைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார் ராதிகா.
ஒரு மாற்றுத்திறனாளியாய் மாற ராதிகாவின் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என கேட்டதில்..? தனது 6 வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல ஓடி ஆடி விளையாடியவர் திடீரென கீழே விழுந்து தொடை எலும்பில் சின்ன முறிவு ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மருந்து, பக்கத்தில் உள்ள மருத்துவர் என பெற்றோர் அழைத்துச் சென்றும், வலி மட்டும் குறையவில்லை. பிறகு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் செல்ல, அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், உடனடியாக சர்ஜரி செய்யவில்லை எனில், உங்கள் பொண்ணால் எழுந்து இனி நடக்கவே முடியாது என சொல்லப்பட்டிருக்கிறது.
வெற்றிகரமாய் சர்ஜரி முடிந்து கோயம்புத்தூர் திரும்பிய நிலையில், தன் அண்ணனோடு விளையாடியதில் மீண்டும் அதே இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த முறை கோயம்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராதிகாவின் தண்டுவடம் வளைந்த நிலையில் இருக்க, அவருக்கு வந்திருப்பது Osteogenesis Imperfecta Tarda எனப்படும், எளிதில் எலும்புகள் உடையக்கூடிய மரபணுக் கோளாறு என மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.சுருக்கமாய் சொன்னால், எலும் புகள் கண்ணாடி மாதிரி உடையக்கூடிய தன்மையோடு (Glass bone disease) இருக்கும். இது பிறவியிலேயே வரும் குறைபாடு.
இதில் கொடுமையான விஷயம் என்னவெனில், இனி வாழ்நாள் முழுவதும் இப்படித்தான். கவனமா இருக்க வேண்டும். லேசாக விழுந்தாலும் எலும்பு உடையும் எனச் சொல்லப்பட, அடுத்த ஆறு வருடங்கள் ராதிகாவின் உலகம் நான்கு சுவற்றுக்குள் முடங்கியது. வாக்கர் உதவியின்றி அவரால் நகர முடியவில்லை. இந்த நிலையில், தான் படித்த பள்ளி, தன் நண்பர்கள், விளையாட்டு என்கிற இயல்பான குழந்தை பருவம் பறிபோக, தனிமை அவரை ஆழமான மன அழுத்தத்திற்குள் தள்ளியது.
இந்த நேரத்தில் அவரின் அண்ணன் கைவினைப் பொருட்கள் செய்கிற YouTube வீடியோ ஒன்றை ராதிகாவிடம் காட்ட, சும்மா முயற்சித்துப் பார்ப்போமே என, வீட்டில் இருந்த பழைய செய்தித்தாள்களை வைத்து, சுவர் அலங்காரப் பொருள் ஒன்றை முதலில் செய்ய, அது அழகா வந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்கள், எங்களுக்கும் செய்து கொடு என்று கேட்கத் தொடங்க, அப்படியாகச் செய்த ஒன்று 100 ரூபாய்க்கு விலை போனது.
இது ராதிகாவுக்கு கிடைத்த சின்ன வெற்றிதான். ஆனாலும், இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கை பெரியது. இந்த சமூகத்துடன் தன்னால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலில், தான் செய்த கலைப்பொருட்கள் தன் சார்பாக வெளி உலகத்தோடு பேச ஆரம்பிக்கவே, இது அவருக்கும் சமூகத்துக்கும் இடையில் ஏற்பட்ட முதல் பாலமாய் அமைந்திருக்கிறது. இந்நிலையில், 8 வருடத்திற்குப் பிறகு உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு ராதிகா செல்ல, அங்கு தன் வயதில் இருந்த உறவினர்கள், கல்லூரி, வேலை, திருமணம் என அடுத்த கட்டத்துக்கு நகர, தான் மட்டும் அதே இடத்தில், அதே நான்கு சுவற்றுக்குள் இருப்பது ராதிகாவுக்குள் வலியை ஏற்படுத்த, தானும் படிக்கணும்… வெளியில் போகணும் என்கிற உந்துதலை இந்த நிகழ்வு தந்திருக்கிறது.
வெளி உலகத்தின் மீது, ராதிகாவுக்கு வந்த ஆர்வம் நடப்பதற்கான தெம்பை அவருக்கு கொடுக்கத் தொடங்க, தொடர்ந்து வீட்டில் இருந்தே படித்து 12ம் வகுப்பை முடிக்கிறார். படிப்பு ஒரு பக்கம், கைவினைப் பொருள் தயாரிப்பு இன்னொரு பக்கம் என நகர்ந்த நிலையில், அண்ணணின் நண்பர் ஒருவர் ஆப்ரிக்கா பாணி கருப்பு பொம்மைகளை செய்தித்தாள்களில் செய்கின்ற தெலுங்கு மொழியிலான YouTube வீடியோ ஒன்றை ராதிகாவின் கவனத்திற்குக் கொண்டு வர, ‘பொம்மை பார்க்க நல்லாதான் இருக்கு.
ஆனா, கருப்பா இருக்கே… இதை யாரு வாங்குவா? எப்படி செய்யுறது’ என யோசித்திருக்கிறார். ‘முயற்சித்து பாரென’ அண்ணன் சொல்ல, இந்த சமுதாயத்தில் கருப்பு நிறம் பெரும்பாலும் எதிர்மறையாக பார்க்கப்படுவதுடன், அழகுக்கு எதிராகவும் சித்தரிக்கப்படுகிறதே என்ற தனது தயக்கத்தை மீறி, முயற்சித்து பார்க்க முடிவெடுத்திருக்கிறார். ராதிகாவுக்கு முதல் பொம்மையை செய்து முடிக்க நான்கு நாட்கள் எடுக்கவே, இதுவொரு தியானம் மாதிரியாக அவருக்கு இருந்திருக்கிறது.
தன்னுடைய முதல் பொம்மை அழகாக வந்ததும், அது தந்த உற்சாகத்தில், அடுத்தடுத்த பொம்மைகளை வரிசையாக செய்யத் தொடங்கி, அவற்றைப் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர, ‘இது பேப்பரில் செய்த மாதிரியே தெரியலையே… நம்ப முடியல’ என பலரும் கமெண்ட் செய்ய, இன்னும் சிலரோ பொம்மையின் கருப்பு நிறத்தால் புறக்கணித்தனர்.ஒரு பொருளின் அருமை, அதை தொட்டு உணரும் போதோ இல்லை பக்கத்தில் இருந்து பார்க்கும் போதுதானே புரியும். இந்த நிலையில், கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நடந்த கண்காட்சி ஒன்றில் ராதிகா, தான் உருவாக்கிய ஆப்ரிக்க பேப்பர் பொம்மைகளை காட்சிப்படுத்தவே, நிலைமை தலைகீழாய் மாறி, எல்லா பொம்மைகளும் விற்றுத் தீர்ந்தது.
ஒருவர் இரண்டு பொம்மைகள் ஜோடியாகக் கிடைத்தால், கல்யாணத்தில் பரிசளிக்க சிறப்பாக இருக்கும் எனச் சொல்ல, அதிலிருந்தே கல்யாண பொம்மைகளை மொத்தமாக செய்ய ஆரம்பித்திருக்கிறார் ராதிகா. பிறகு கொலு பொம்மைகள் ஆர்டர்களும் வர ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தொடர் வெற்றிகள் கொடுத்த நம்பிக்கையில், இதையே தொழிலாக மாற்றவும் முடிவு பண்ணியிருக்கிறார் ராதிகா. மூங்கில் குச்சிகளை மையமாக வைத்து, அதற்கு மேல் செய்தித்தாள் சுருள்களை(paper tubes) வைத்து உடலமைப்பு ஒன்றை முதலில் உருவாக்குபவர், பிறகு டிஸ்யூ பேப்பர் மற்றும் பசைக் கலவையால் கோட்டிங் ஒன்றை மேலே கொடுத்து, பொம்மையின் உறுதித் தன்மையை அதிகமாக்குவதுடன், வெயிலில் காய வைத்து, அதற்கு மேல் வெள்ளை பெயின்ட் செய்து, பிறகு அக்ரிலிக் வண்ணங்கள் மூலம் பொம்மையை மெருகேற்றுகிறார்.
இறுதியாக வார்னிஷ் பூசி முடிக்கிறார்.ராதிகாவின் பொம்மை தயாரிப்பில் உள்ள அழகான விஷயத்திற்குப் பின்னால், அவரின் அம்மா, அப்பா, அண்ணி, அண்ணன் என அவரது குடும்பமே பக்க பலமாக இருக்கிறார்கள். 100 ரூபாய்க்கு செய்த ஒரு பொம்மையில் தொடங்கிய பயணம் இன்று, 50,000 ரூபாய் மதிப்புள்ள பொம்மைகளையும் உருவாக்கும் அளவுக்கு ராதிகா வளர்ந்திருக்கிறார். அவரின் இந்தப் பயணம் தமிழக ஆளுநர் கையால் விருது வாங்கும் வரை அவரை உயர்த்தியிருக்கிறது.
ராதிகாவின் பொம்மைகளை வித்தியாசமா, கருப்பா இருக்கென முதலில் ஒதுக்கியது போலத்தானே அவரின் உடல்நிலையையும் இந்த சமூகம் தொடக்கத்தில் பார்த்திருக்கும். கலையாக இருந்தாலும் சரி… மனிதர்களாக இருந்தாலும் சரி… யோசித்துப் பார்த்தால் அவர்களுக்குள் இருக்கும் அளப்பரிய திறனையும் அழகையும் நாம் எத்தனை முறை தவற விடுகிறோம். ராதிகா செய்தித்தாள்களை மட்டுமல்ல… தன் வாழ்க்கையையும் அப்சைக்கிளிங் செய்திருக்கிறார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
