இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி

முல்லன்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மொகாலி முல்லன்பூரில் நேற்றிரவு நடந்த 23வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி 37 பந்தில், 4பவுண்டரி, 5 சிக்சருடன் 64, அப்துல் சமத்,25, டிராவிஸ் ஹெட் 21 ரன் அடித்தனர். 20 ஓவரில் சன் ரைசர்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. பஞ்சாப் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 4, சாம்கரன், ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 183 ரன் இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் ஷஷாங்க் சிங் நாட் அவுட்டாக 46, அசுதோஷ் சர்மா 33, சாம்கரன் 29, சிக்கந்தர் ரசா 28 ரன் எடுத்தனர். 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் சன்ரைசரஸ் த்ரில் வெற்றி பெற்றது. 64 ரன் அடித்ததுடன் பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுத்த நிதிஷ்குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார். 5வது போட்டியில் சன்ரைசர்சுக்கு இது 3வது வெற்றியாகும். பஞ்சாப் 5வது போட்டியில் 3வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: பஞ்சாப் பவுலர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி ஏற்படுத்தினர். இருப்பினும் நாங்கள் 182 ரன் எடுத்து வெற்றிகரமாக காத்துக் கொண்டோம். இம்பேக்ட் பிளேயர் விதியால் பேட்டிங் பலம் ஆகிறது. அது சாதகமாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டி முழுவதுமே பாசிட்டிவாக தான் இருந்தோம். 150 ,160 ரன் எல்லாம் அடித்தால் நிச்சயமாக 10க்கு 9 போட்டிகளில் தோல்வி அடைய தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பவுலிங்கில் புதியபந்தை சிறப்பாக பயன்படுத்துவது தான் வெற்றிக்கு ஒரே வழி என்பதை அறிந்து கொண்டோம். புவனேஸ்வர் தொடர்ந்து ஸ்டெம்புகளை குறிவைத்து வீசி கொண்டு இருந்தார்.

அணியில் பல இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதும் கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கிறது. ஷஷாங்க் -அசுதோஷ் சர்மா சிறப்பாக விளையாடினர். கடந்த வாரம் இருவரும் பிரமாதமாக செயல்பட்டதை பார்த்தேன். இதேபோன்று எங்கள் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியும் அபாரமாக ஆடினார். பந்துவீச்சிலும் 3 ஓவர் வீசினார்.நிச்சயமாக அது எங்களுக்கு நல்ல விஷயம் தான், என்றார். ஆட்டநாயகன் நிதிஷ்குமார் ரெட்டி கூறியதாவது: “இன்று எனது செயல்பாடு என்பது அணிக்கு மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரிய விஷயமாக அமைந்திருக்கிறது. நான் என்னை நம்ப வேண்டும், அணிக்காக நான் களத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நான் சொல்லிக் கொண்டேன். பஞ்சாப் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். எனவே சுழற்பந்து வீச்சாளர் வந்ததும் அடித்து ஆட ஆரம்பித்தேன். பேட், பவுலிங் என நல்ல பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். நான் இப்படி இருக்கத்தான் எப்பொழுதும் நினைக்கிறேன்” , என்றார்.

The post இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: