உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா துவங்கியது

*23ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா நேற்று மாரியம்மன் கோயில் அருகில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இதில் கூவாகம் மற்றும் சுற்றியுள்ள வேலூர், நத்தம், தொட்டி, பந்தலடி, சிவிலியாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டு வந்த கூழ் குடங்களை வைத்து படையலிட்டனர். பின்னர் படையலிடப்பட்ட கூழ் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் மகா பாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

12ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு மற்றும் சுவாமி வீதியுலா, 21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. 22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து 24ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கூவாகம் கிராம மக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர், மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: