தேனி மாவட்டத்தில் தினமும் சதம் அடிக்கும் வெயில்: பொதுமக்கள் அவதி

 

தேனி/கம்பம், ஏப்.10: தேனி மாவட்டத்தில் தினமும் 100 டிகிரி வெயில் அடிப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தேனி மாவட்டமானது மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சுருளியாறு, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி என அருவிகள் சூழ்ந்தும், முல்லைப்பெரியாறு, வைகையாறு, மஞ்சளாறு, கொட்டக்குடியாறு, வராக ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகள் தேனி மாவட்டத்தில் செல்கிறது.

இது தவிர தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணை உள்ளிட்ட அணைகளும் உள்ளன. இதனால், தேனி மாவட்டத்தில் அணை, கண்மாய் பாசனங்கள் வாயிலாக விவசாயம் பெருமளவில் நடக்கிறது. இதன்காரணமாக தேனி மாவட்டத்தில் எப்போதும் இயல்பைக் காட்டிலும் குறைவான வெப்பநிலையே இருக்கும். நடப்பாண்டு தேனி மாவட்டத்தில் போதிய அளவு கோடைமழை பெய்யாத நிலையில், ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து, நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இதன்காரணமாக தேனி மாவட்டத்தில் வெய்யில் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 100 டிகிரி செல்சியஸ் வெய்யில் கொளுத்தியது. காலை 6 மணிக்கெல்லாம் துவங்கி விடும் வெயில் புழுக்கமும், வெயிலின் தாக்கமும் பகல் நேரத்தில் அதிகரித்து விடுகிறது. இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

தேனி நகரில் எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடிய பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலை, போடி காமராஜர் சாலை, பெரியாண்டவர் ஹைரோடு, தேவாரம் ரோடு, முந்தல், மூணாறு ரோடு, பஸ் நிலைய பகுதிகளிலும் பகல் வேளையில் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் கம்பம், சின்னமனூர் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

நடந்து செல்வோரும் ஆங்காங்கே உள்ள குளிர்பானக் கடைகள், கம்பங்கூழ், மோர் கடைகள், இளநீர் கடைகள், கரும்புச்சாறு கடைகளில் கூடி குளிர்பானம் பருகி தங்களது வெய்யில் தாகத்தை தனித்துக் கொள்ளும் நிலை உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களும், கட்சியினரும் சிரமமடைந்து வருகின்றனர்.

The post தேனி மாவட்டத்தில் தினமும் சதம் அடிக்கும் வெயில்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: