கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ, வாடகை வேன் நிறுத்த அனுமதி மறுப்பு: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு

 

கமுதி, ஏப். 10: கமுதி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், பேருந்து போக்குவரத் துக்கும் இடையூறாக இருப்பதால் ஆட்டோ, வாடகை வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, சேலம், விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட வெளியூர் களுக்கு பயணம் மேற்கொள்ள நாள்தோறும் கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 250 கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந் நிலையில் கமுதி பேருந்து நிலைய அனுமதி புதுப்பித்தலுக்காக ஆய்வுக்கு வந்த பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் பத்மப்ரியா பேருந்து நிலையத்திற்குள் ஆட்டோக்கள், வாடகை வேன்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து இருந்ததையும், பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கும், பயணிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து ஆட்டோக்கள் மற்றும் வாடகை வேன்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே இடம் ஒதுக்கி கொடுக்கும்படி கமுதி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ, வேன் இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மூன்று இடங்களில் பதாகைகள் வைத்து எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலைய வளாகத்தில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறோம்.

வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வெளியே ஆட்டோக்களை நிறுத்தினால், பெரும் சிரமப்படுவார்கள். மேலும் தினசரி வருமானத்தை நம்பி ஆட்டோ ஓட்டி, குடும்பத்தை கவணித்து வரும் தொழிலாளிகளின் நலன் கருதி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், ஆட்டோக்களை நிறுத்தி வாழ்வாதாரங்களை காக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

The post கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ, வாடகை வேன் நிறுத்த அனுமதி மறுப்பு: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: