ஒடிசா, அரியானாவில் அதிரடி திருப்பம் பாஜவில் இருந்து ஓட்டம் பிடிக்கும் தலைவர்கள்: காங்கிரசில் இணைகின்றனர்

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், ஒடிசா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் திடீர் திருப்பமாக பாஜவிலிருந்து பல தலைவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். பலரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளில் மக்களவை தேர்தலும், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ளது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் அனல் பறந்து வருகின்றன. இம்முறை மக்களவை தேர்தலில் பாஜ 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டுமென இலக்கு நிர்ணயித்து பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

ஆனால் கள நிலவரங்கள்படி அக்கட்சிக்கு 200 தொகுதிகள் கூட கிடைக்காது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கேற்றார் போல் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒடிசா, அரியானாவில் பல மாஜி தலைவர்கள் பாஜவிலிருந்து ஓட்டம் பிடித்து வருகின்றனர். அரியானாவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரான பிரேந்தர் சிங் (78), அவரது மனைவி பிரேம் லதா சிங் ஆகியோர் பாஜவிலிருந்து விலகியதாக நேற்று அறிவித்துள்ளனர். இவர்கள் இன்று காங்கிரசில் சேர உள்ளனர். பாஜவிலிருந்து விலகிய பின்னர் டெல்லியில் அரியானா காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவை பிரேந்தர் சிங் சந்தித்துள்ளார்.

பிரேந்தர் சிங்கின் மகனும், ஹிசார் தொகுதி பாஜ எம்பியுமாக இருந்த பிரஜேந்திர சிங் கடந்த மார்ச் 10ம் தேதி பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அடுத்த ஒரு மாதத்தில் அவரது தந்தையும், தாயும் பாஜவிலிருந்து விலகி காங்கிரசில் சேர உள்ளனர். பிரேம் லதா சிங் முன்னாள் எம்எல்ஏ ஆவார். பிரேந்தர் சிங் மோடியின் முதல் ஆட்சிகாலத்தில் ஒன்றிய எஃகு அமைச்சராகவும், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். காங்கிரசில் 40 ஆண்டுகள் இருந்த பிரேந்தர் சிங் கடந்த 2014ல் பாஜவில் சேர்ந்தார்.

தற்போது மீண்டும் காங்கிரசுக்கு வருகிறார். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர் பிரேந்தர் சிங். இதே போல ஒடிசாவில் பாஜ முன்னாள் எம்பி ரபி நாராயணன் பானி, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுநாத் மொகந்தி உள்ளிட்டோரைத் தொடர்ந்து, அம்மாநில பாஜ துணைத்தலைவர் லேகா ஸ்ரீ சமந்தசிங்கர் பாஜவிலிருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி சேர பாஜ பல்வேறு வழிகளிலும் முயற்சித்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. பிஜூ ஜனதா தளம், பாஜ தனித்து போட்டியிடும் நிலையில், பாஜவிலிருந்து தொடர்ந்து கட்சி தலைவர்கள் விலகி பிஜூ ஜனதா தளத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் பாஜ மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

The post ஒடிசா, அரியானாவில் அதிரடி திருப்பம் பாஜவில் இருந்து ஓட்டம் பிடிக்கும் தலைவர்கள்: காங்கிரசில் இணைகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: