பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பில் பாஜ நிர்வாகி கைது? செல்போன் தகவல்களையும் சேகரிக்க திட்டம்

பெங்களூரு: ராமேஸ்வரம் ஓட்டல் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பாஜ நிர்வாகி சாய் பிரசாத் என்ஐஏ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவின் பிரபலமான ராமேஸ்வரம் கபே ஓட்டலின் குந்தலஹள்ளி கிளையில் கடந்த 1ம் தேதி குண்டுவெடித்தது பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் சிசிபி போலீசார், குண்டு வைத்த நபரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், பல்லாரி கவுல் பஜாரை சேர்ந்த துணி வியாபாரியும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவருமான மினாஜ் என்ற முகமது சுலைமான் உட்பட 4 பேரிடம் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்திவருகிறது.

அத்துடன் வெடிகுண்டு வைத்த நபரை பற்றி தகவல் அளிக்கும் நபர்களுக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. என்.ஐ.ஏ. போலீசார் ராமேஸ்வரம் ஓட்டலில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலரை கைது செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியை சேர்ந்த சாய் பிரசாத் என்ற நபரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இவர் ஷிவமொக்காவில் கைதான குற்றவாளியின் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க சென்றதும், அருகில் உள்ள கடைக்காரரிடம் செல்போனில் பேசியதும் தெரிய வந்தது.

சாய் பிரசாத், தீர்த்தஹள்ளி பாஜ செயலாளர் என்பதும், ராமேஸ்வரம் ஓட்டல் உரிமையாளரின் நன்பர் என்பதும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாய் பிரசாத், செல்போனை ஆய்வு செய்துள்ள என்ஐஏ போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. சாய் பிரசாத் என்ஐஏவால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளியிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருகிறோம். ஆதாரமற்ற செய்திகளால் விசாரணை பாதிக்கப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய் பிரசாத் கைது குறித்த செய்தியை என்ஐஏ உறுதிபடுத்தவோ, நேரடியாக மறுக்கவோ இல்லை.

The post பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பில் பாஜ நிர்வாகி கைது? செல்போன் தகவல்களையும் சேகரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: