இருதரப்பு உறவு மோசமடையும் நிலையில் இந்தியாவிலிருந்து தூதரை திரும்ப அழைத்த வங்கதேசம்: அவசர ஆலோசனையால் பரபரப்பு

புதுடெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ராஜதந்திர உறவு மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள தனது தூதரை வங்கதேச அரசு அவசரமாக நேரில் அழைத்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையே வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாகத் திப்பு சந்திர தாஸ் என்ற இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கடந்த 23ம் தேதி டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி விசா வழங்கும் சேவையைக் காலவரையன்றி நிறுத்தி வைப்பதாக வங்கதேசத் தூதரகம் கடந்த 22ம் தேதி அறிவித்தது. பரஸ்பரம் இரு நாடுகளும் மாறி மாறித் தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவித்ததால், இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவில் உள்ள தனது தூதர் எம்.ரியாஸ் ஹமிதுல்லாவை உடனடியாக நாடு திரும்புமாறு ‘அவசர அழைப்பு’ விடுத்தது. இந்த உத்தரவை ஏற்று அவர் நேற்றிரவு டாக்கா சென்றடைந்தார்.

முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது டெல்லியில் நிலவும் கள நிலவரம் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர சிக்கல்கள் குறித்தும் அவர் விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது. தூதரைத் திரும்ப அழைத்து ஆலோசனை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories: