திருவனந்தபுரம்: ஜன.14 ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல காலம் கடந்த 27ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. இந்த மண்டல சீசனில் 36.33 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த வருடத்தை விட இம்முறை சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடுதலாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் மகரவிளக்கு கால பூஜைகள் நாளை (31ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இன்று நடை திறப்பை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
