மோடி மீண்டும் பிரதமரானால் நல வாரியங்கள் முடக்கப்படும்: தயாநிதி மாறனை ஆதரித்து பொன்குமார் பிரசாரம்

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், சூளைமேடு அண்ணா நெடும்பாதை, பெரியார் பாதை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தல் என்பது தொழிலாளர்களின் எதிர்காலம் சார்ந்ததாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்பட 18 நல வாரியங்கள் தொழிலாளர் துறையின் கீழ் தனித்தனியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மீண்டும் மோடி பிரதமரானால் இந்த வாரியங்கள் முடக்கப்பட்டு அவை ஒன்றியத்தின் கீழ் கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.

ஏனென்றால், மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு வந்த மோடி, மாநில உரிமைகளை அப்பட்டமாக பறிக்கும் மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறார். மாநிலத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக தற்போது பறிக்கப்பட்டு வருவது கண்கூடானதாகும். ஆளுநர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயல்படாமல் முடக்கப்படுவது நாம் தமிழ்நாட்டில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். மோடி ஒரு தொழிலாளர்களுக்கு அப்பட்டமான விரோதமான பிரதமராவார். ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போடப்பட்ட 44 சட்டங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 கோடுகளாக மாற்றி தொழிலாளர்களுக்கு துரோகம் செய்தவர் தான் மோடி.

எனவே அவர் மீண்டும் பிரதமரானால் மாநிலங்களில் தனித்தனியாக செயல்படக்கூடிய சுய அதிகாரத்தோடு செயல்படக்கூடிய அந்த வாரியங்களை எல்லாம் ஒன்றாக்கி, ஒன்றிய அரசின் கீழ் கொண்டு சென்று விடும் அபாயத்தை நாம் புறந்தள்ள முடியாது. எனவே வாரியங்கள் மாநில அளவில் தனித் தன்மையோடு செயல்பட வேண்டுமேயானால் திமுக அணி வெற்றி பெற வேண்டும். அதற்கு இங்கு இருக்கிற தொழிலாளர்கள் உங்கள் குடும்ப ஓட்டுகளை எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின் போது பொதுச் செயலாளர் என்.சுந்தராஜ், மாநில துணைத் தலைவர் பி.கே.மூர்த்தி, அமைப்பு செயலாளர் ஏ.ஜெ.நாகராஜ், மாவட்ட தலைவர் டி.எஸ்.ஏழுமலை, மாவட்ட செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மோடி மீண்டும் பிரதமரானால் நல வாரியங்கள் முடக்கப்படும்: தயாநிதி மாறனை ஆதரித்து பொன்குமார் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: