மழை, வெள்ள காலத்தில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றினோம் பாஜவிலிருந்து யாராவது ஒருவர் உங்களுக்கு உதவ வந்தார்களா? மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: மழை, வெள்ள காலத்தில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றினோம். பாஜவிலிருந்து யாராவது ஒருவர் உங்களைப் பார்க்க, உங்களுக்கு உதவ வந்தார்களா, என்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணாநகர் வடக்கு பகுதிக்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் நேற்று வீதி வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், பகுதி செயலாளர் ச.பரமசிவம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

வாக்கு சேகரிப்பின் போது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘கொரோனா மற்றும் மழை வெள்ள காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டபோது, நானும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றினோம். நலத்திட்ட மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினோம். உங்களுக்கு தெரியும். அப்போது பாஜவிலிருந்து யாராவது ஒருவராவது உங்களை பார்க்க, உங்களுக்கு உதவ வந்தார்களா, யாரும் வரவில்லை. மற்றவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஏமாற்றினார்கள். அப்படி ஏமாற்றுபவர்கள் உங்களுக்கு வேண்டுமா அல்லது ஆபத்து காலத்தில் உங்களோடு நின்று சேவை செய்பவர்கள் வேண்டுமா,’’ என்றார். அதற்கு மக்கள், “எங்களுக்கு நல்லது செய்பவர்களாகிய நீங்கள் தான் வேண்டும்” என்று உரக்க பதிலளித்தனர்.

பின்னர், வேட்பாளர் தயாநிதி மாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக இருந்தார். ஒரு மாநிலத்திற்கு அல்ல. 2 மாநிலத்திற்கு இருந்தார். 2 மாநிலத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை. அடிக்கடி தமிழகத்திற்கு வந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். இவர் வந்து யாரையும் பற்றி பேசக்கூடாது. புதுச்சேரி, தெலங்கானா என 2 மாநிலங்களின் அரசு வருமானத்தில், அரசு செலவில் நன்றாக உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பற்றி மக்களிடம் கேட்டுப் பாருங்கள். பதில் சொல்வார்கள். மக்கள் நலத்திட்ட பணிகள் என்று ஆரம்பித்து இதுவரை யாரும் செய்திராத ஸ்டேட் ஒலிம்பியாட்டை நடத்தியுள்ளார்.

பாதம் தாங்கி எடப்பாடி என்ன செய்தார். எதுவுமே செய்யவில்லை. தன்னுடைய ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தையும் பறி கொடுத்தார். அதனால் தமிழ்நாடு பின்தங்கியது. இந்த மகளிர் உரிமை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த திட்டம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் மேல் எனக்கு வருத்தமிருக்கிறது. அவர் நல்ல மனிதர். ஆனால் பாவம் அவர். தேர்தல் நேரத்தில் அவர் அதிமுகவுடன் கூட்டணி என்று போவார். அப்புறம் அப்பாவுக்கு சண்டை என்று கூறி வேறொரு கூட்டணிக்குச் செல்வார். வெட்கமில்லாமல் மாறி மாறி சூட்கேஸ்கள் சுமந்து மக்கள் பிரச்னைகளை மறந்தவர் அன்புமணி ராமதாஸ். இவ்வாறு அவர் கூறினார்.

The post மழை, வெள்ள காலத்தில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றினோம் பாஜவிலிருந்து யாராவது ஒருவர் உங்களுக்கு உதவ வந்தார்களா? மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: