வேளச்சேரி பகுதியில் சுற்றுலா தலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி 36வது வட்டம், 136அ வட்டத்தில் உள்ள ராணி அண்ணா நகர், கன்னிகாபுரம், விஜயராகவபுரம், சத்யா கார்டன், பரணி காலனி, ராஜமன்னார் சாலை, பொப்பிலிராஜா சாலை, ஆற்காடு ரோடு, சிவலிங்கபுரம், எல்ஐசி குடியிருப்பு, சி.பி.டபள்யூ.டி குடியிருப்பு, டபுள்டேங் காலனி, லட்சுமணசாமி சாலை, அழகிரிசாமி சாலை, அண்ணா மெயின் ரோடு, ராமசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, பி.டி.ராஜன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, 136வது வார்டு கவுன்சிலர் நிலவரசி, கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நான் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பது. அதனை இன்னும் செய்யவில்லை. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் அதையும் செய்யவில்லை. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன். அதையும் செய்யவில்லை. வேளச்சேரி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென கூறினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் பள்ளிக்கரணை குறித்து அதிகம் தெரிந்தவராக இருக்கட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி அனுமதி வாங்கி உள்ளோம். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையின் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்ட் நிதியுதவியுடன் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வேளச்சேரி பகுதியில் சுற்றுலா தலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: