திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம், ஏப்.4: ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம் – மதுரை சாலையில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பூக்குழியுடன் கூடிய 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு முன்பாக மூலவரான அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும், அதனருகே அமைந்துள்ள பலி பீடத்திற்கும் எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது.

பின்னர் மஞ்சள், அரிசி மாவு, வாசனை திரவியங்கள், பால், சந்தனம், தேன், கும்ப நீர் உள்ளிட்டவைகளால் கொடி மரத்திற்கும், பலி பீடத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் கொடி மரத்தில் நெற் கதிர்கள் வைக்கப்பட்டு மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு நிலை மாலை சாத்தப்பட்டு, மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் 13ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: