சென்னையின் எப்சி உடன் நார்விச் சிட்டி ஒப்பந்தம்

சென்னை, ஏப்.4: ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் சென்னையின் எப்சி கால்பந்து அணியை மேம்படுத்தும் வகையில், இங்கிலாந்து கால்பந்து கிளப்பான நார்விச் சிட்டி எப்சி அணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சென்னை அணியின் துணைத் தலைவர் ஏகனாஷ் குப்தா, நார்விச் சிட்டி எப்சி அணியின் வணிக இயக்குநர் சாம் ஜெஃப்ரி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது இருவரும் தங்கள் அணிகளின் சீருடைகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து பேசிய ஏகனாஷ், ‘சுமார் 120 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் புகழ் பெற்ற இங்கிலாந்து கிளப்புடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எங்கள் அணி மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். நவீன தொழில்நுட்பங்கள், தேர்ந்த மேலாண்மைகள், புதிய உத்திகள் மூலம் அணியை மேம்படுத்துவதே இலக்கு’ என்றார். சாம் ஜெஃப்ரி பேசும்போது, ‘இந்தியா வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு பொருளாதாரத்தை கொண்டுள்ளது. தொழில்முறை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் மேம்பட்டு வருகின்றன. சென்னை அணியுடன் இணைந்து செயல்படும்போது இரு தரப்புக்கும் வணிக வாய்ப்புகள் பயன் உள்ளதாக அமையும். பயிற்சி முகாம்கள், போட்டிகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மூலம் வீரர்கள் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன’ என்றார்.

The post சென்னையின் எப்சி உடன் நார்விச் சிட்டி ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: