பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மருதாநதி அணையின் மொத்த உயரம் 74 அடியாகும். அணையில் தற்போது 60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் அய்யம்பாளையம்-சித்தரேவு சாலையில் மருதாநதி பெரியஆற்றுப்பாலம் அருகில் நிலக்கோட்டை தாலுகா கடைமடை பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்லும் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து இரு தாலுகா பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் பிரித்து விடப்படுகிறது.

இந்நிலையில் இந்த அணைக்கட்டிலிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் புதர்மண்டியும், தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர்கள் பழுதடைந்தும் இருந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அருகாமையில் உள்ள தென்னந்தோப்புகளுக்குள் புகுந்தது. இதனை சீரமைக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையேற்று, நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டில் உள்ள ஷட்டர்களை புதுப்பிக்கும் பணியும், தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புனரமைக்கும் பணியும், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடாமல் தடுப்பதற்காக தடுப்புச் சுவரும், தாமரைக்குளம் அருகாமையில் வாய்க்காலை கடந்து செல்வதற்கு 15 அடி நீளமுள்ள புதிய சிமெண்ட் பாலம் கட்டும் பணியும் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுகுமார், மருதாநதி அணை வடிகால் உபகோட்ட செயற்பொறியாளர் செல்வம், மருதாநதி அணை பொறியாளர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: