அமமுக நிர்வாகி செங்கல் சூளையில் 3648 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

பரமக்குடி: பரமக்குடி அருகே அமமுக நிர்வாகிக்கு சொந்தமான செங்கல் சூளையிலிருந்து 3648 போலி மதுபான பாட்டில்களை மத்திய நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குமரத்தகுடிப்பட்டியில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர். இச்சம்பவத்தில் கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாண்டியூர் கிராமத்திற்கு போலி மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி காசிவிஸ்வநாதன் தலைமையில் போலீசார் பாண்டியூர் கிராமத்தில் உள்ள நயினார்கோவில் தெற்கு ஒன்றிய அமமுக செயலாளர் சாமித்துரை என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஆய்வு செய்தனர். இதில், 76 பெட்டிகளில் இருந்த 3648 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை சிவகங்கை மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தலைமறைவாக உள்ள சாமித்துரையை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மதுரை மண்டலம் மத்திய நுண்ணறிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். அமமுக நிர்வாகி செங்கல் சூளையிலிருந்து 3648 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமித்துரையின் மனைவி சத்யா பாண்டியூர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமமுக நிர்வாகி செங்கல் சூளையில் 3648 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: