தமிழ்நாட்டில் பாஜகவை குழிதோண்டி புதைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்: பாஜக நிர்வாகி தடா பெரியசாமி விமர்சனம்

சென்னை: அதிமுகவில் இணைந்த பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, தமிழ்நாட்டில் பாஜகவை குழிதோண்டி புதைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார். இவர், விசிகவில் திருமாவளவனுக்கு அடுத்த நிலையில் இருந்தார். மேலும், சிதம்பரம் தொகுதி என்பது தடா பெரியசாமிக்கு சொந்த ஊர்.

இதனால் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் வேலூரைச் சேர்ந்த கார்த்தியாயினிக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இன்று காலையில் இணைந்தார். இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் தடா பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து இருக்கிறேன் விரைவில் எனது ஆதரவாளர்கள் இணைய இருக்கிறார்கள். வரும் தேர்தலில் குறிப்பாக சிதம்பரம் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்வேன் அதுமட்டுமின்றி அதிமுக சார்பில் போட்டியிடும் பட்டியலின வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

நான் பாஜகவில் பட்டியல் அணி மாநில அணி தலைவர் என்னுடைய சொந்த தொகுதி சிதம்பரம், என்னுடன் ஆலோசிக்காமல் வேலூரை சேர்ந்த ஒரு பெண் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பட்டியலின தலைவர் எனக்கே மரியாதை இல்லாதபோது எப்படி பட்டியலின சமுதாயத்திற்கு மரியாதை இருக்கும். இதற்கு முழு காரணம் மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல் முருகன், கேசவவிநாயகம் 3 நபர்கள் தான். இந்த 3 நபர்கள் தான் கட்சியா? மாநில நிர்வாகிகள் கோர் டீம் (core team) என்ற அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு தேவையான சீட்டை பிரித்துக்கொள்கின்றனர். இது எந்த அளவிற்கு கொடுமையானது.

நான் 2004ல் பாஜகவில் இணைந்தேன். கட்சிக்காக அப்போது இருந்து உழைத்து கொண்டு இருக்கிறேன். கூடுதலாக பல்வேறு பணிகள் செய்து வருகிறேன். சமூக நீதி என்று பாஜக கூறுகிறது. அப்படியென்றால் வேலூர் அருகில் அந்த பெண்ணிற்கு பொதுத்தொகுதி கொடுத்து இருக்க வேண்டும். எதுக்கு தனி தொகுதி தர வேண்டும். எனக்கு தொகுதி தரவில்லை என்று நான் வருத்தப்படவில்லை பட்டியலின சமுதாயத்தை மதிக்கவில்லை என்று தான் கவலை.

நான் அண்ணாமலையிடம் கேட்டதற்கு அவர் இது கட்சியின் முடிவு என்று தெரிவித்துவிட்டார். அதிமுக வில் இணைந்தது என்னுடைய முடிவு. அண்ணாமலை செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு என்னுடைய எதிர்காலத்தை விட மரியாதை தான் முக்கியம். தமிழ்நாட்டில் பாஜகவை குழிதோண்டி புதைக்கும் பணியைச் அண்ணாமலை செய்து வருகிறார். அதேபோல தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து விட்டது என்று சொல்வது பிம்பம் தான். இந்த தேர்தலில் அண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பாஜக தோற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் பாஜகவை குழிதோண்டி புதைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்: பாஜக நிர்வாகி தடா பெரியசாமி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: