மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் :காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நம்பிக்கை!!

டெல்லி : மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நம்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2018-19ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் பல வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், காங்கிரசுக்கு மேலும் ரு்.1823 கோடி அபராதம் செலுத்துமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை பாஜக அரசு முடக்கி உள்ளது. இத்தகைய செயல் பொருளாதார ரீதியாக காங்கிரஸை முடக்கும் பாஜகவின் போலி முயற்சிகளே தவிர, வேறொன்றும் இல்லை. பாஜக அரசின் இதுபோன்ற தந்திரங்களுக்கு பயப்படும் கட்சி காங்கிரஸ் அல்ல. ஒரு கட்சி மேல் வரி பயங்கரவாதம், ஒரு கட்சி தேர்தல் பத்திர திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ஊழல். இது போன்ற சூழலில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?. வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் ஜனநாயகம் எதிர்பார்க்கிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் :காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நம்பிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: