தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் : அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சாடல்!!

சென்னை : பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காததால் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட பாஜ கட்சி தலைமையிடம் சீட் கேட்டுள்ளார் தடா பெரியசாமி. ஆனால் அவருக்கு பதில் கார்த்தியாயினிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தடா பெரியசாமி, “மாநில பட்டியல் அணி தலைவராகிய நான், இன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். விரைவில் எனது ஆதரவாளர்களையும் அதிமுகவில் இணைக்கவுள்ளேன். தமிழகத்தில் உள்ள தனி தொகுதிகள், குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். எந்தவித ஆலோசனையும் கேட்காமல் வேலூரைச் சேர்ந்த கார்த்தியாயினிக்கு சீட் கொடுத்துள்ளனர். சமூக நீதி பேசும் கார்த்தியாயினிக்கு வேலூர் பொதுத் தொகுதியில் சீட் கொடுத்திருக்க வேண்டும்.

பட்டியலின மாநிலத் தலைவராகிய எனக்கே மரியாதை இல்லை என்றால், பட்டியல் சமூகத்திற்கு என்ன மரியாதை இருக்கும். ஆகவேதான் பாஜகவில் இருந்து விலகினேன். இதற்கு முழு காரணம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம்தான் காரணம். தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் : அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சாடல்!! appeared first on Dinakaran.

Related Stories: