வளத்தை மேம்படுத்தும் வண்டல் மண்: நீர் பற்றாக்குறையான வயலிலும் மகசூல் பார்க்கலாம்

தேனி: மழை நீரில் அடித்து செல்லப்பட்டு குளத்தில் தேங்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள், குறுமண், களிமண் அடங்கிய கலவை வண்டல் மண் எனப்படுகிறது. குளத்தில் நீர் வற்றிய பிறகு உலர்ந்து கிடக்கும் இந்த வண்டல் மண் நிலத்தில் உரமாகப் பயன்படுத்துவது என்பது நமது பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் ஒன்றாகும். வழக்கமாக மாறிமாறி வருகிற பருவகாலங்களைப் போன்றதுதான் எதிர்பாராத மழையும், மழையின்மையும் ஆனால் சில நேரங்களில் வறட்சி மொத்தமாக நிலத்தை ஆட்கொண்டு இருக்கும். தற்போது சில மாவட்டத்தில் வறட்சி மிகவும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு இடும் இடுபொருள்களான ரசயான உரங்களின் விலையும் தங்கத்தின் விலை போல் உயர்ந்து இருக்கிறது. நிலத்தின் தன்மையை உயர்த்துவதற்காக இயற்கையான குப்பைகள், ஆட்டு, மாட்டு சாணங்கள் என பல தேவைகளை மண்ணுக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த குப்பைகள் எருக்களை விவசாயிகள் விலைக்குதான் வாங்கியே வயலில் போடவேண்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் வண்டல் மண் பெரும்பாலும் தமிழ்நாட்டில் தான் குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றது. இம்மண், மலையில் இருந்து ஓடிவரும் ஆறு, மக்கின செடி, கொடி, தழைகளையும் பல தாதுப்பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. இம்மண், களிமண் கலப்புமிக்க மண்ணாக இருப்பதால் நிலத்தை உழுவது எளிதாக உள்ளது. இம்மண்ணை விளைநிலங்களுக்கு பயன்படுத்தினால், மண் வளம் அதிகரித்து, பயிர் செழிக்கும். மேலும், குளங்களில் இருந்து பெறப்படும் வண்டல் மண்ணை, விளைநிலங்களில் கொட்டி, பயன்படுத்தினால் மண் வளம் அதிகரிக்கும்.

பல ஆண்டுகளாக துார்வாராமல் குளங்களில், தேங்கியிருக்கும் வண்டல் மண்ணில், பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையான கனிமசத்துகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வகை மண்ணை, விவசாய நிலங்களில் பயன்படுத்தினால் குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கு வேறு எந்த உரமும் போட வேண்டிய அவசியம் இருக்காது. குளத்து வண்டல் மண்ணின் பண்புகள் மற்றும் உபயோகப்படுத்தும் முறையினை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் கூறியதாது: வண்டல் மண்ணில் பௌதிக, ரசாயன உயிரியல் பண்புகள் மிகுந்திருப்பதோடு பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் அதிகளவில் இருக்கும். இத்தகைய வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. களித்தன்மை அதிகமாக காணப்படுவதால் வண்டல் மண் கறுப்பு நிறத்தில் மிகுந்த நயத்துடன் குறைந்தளவு பரும அடத்தியுடன் இருக்கும்.

வண்டலைத் தொடர்ந்து மண்ணில் இடும்பொழுது மண்ணின் நயம் பயிர் வளர்ச்சிக்கு தகுந்தவாறு மாற்றப்படுகிறது. வண்டலில் நன்மை தரக்கூடிய பாக்டீரியா. பூஞ்சாணம் மற்றும் இதர நுண்ணுயிரிகள் அதிகளவு இருப்பதோடு பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் எளிதில் கிடைக்கச் செய்கிறது. சாகுபடிக்கு உதவாத மணல்சாரி நிலங்கள், அமில, களர் உவர் நிலங்கள் மற்றும் சரளை நிலத்தில் வண்டல் மண் இட்டு உழுது சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றலாம். மணற்பாங்கான நிலங்களில் எக்டருக்கு 50 முதல் 100 டன் வண்டல் மண் இடவேண்டும். இவ்வாறு இடுவதின் மூலம் மண்ணின் பரும அடர்த்தி குறைந்து மண்ணின் நீர் பிடிப்புத் திறன் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் உயர்வதோடு மண்ணிலுள்ள அங்கக கரிமச்சத்து 0.23 சதவீதத்திலிருந்து 0.92 சதவீதம் உயர்கிறது.

இம்மண்ணில், நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்கள் வளரும். இந்த மண் காணப்படும் பகுதிகளில் நீர் வசதி இருந்தால், தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான, வண்டல் மண்ணை எடுத்து மண் வளத்தை மீட்க விவசாயிகள் முன்வரவேண்டும், என்றனர். விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் வண்டல் மண்ணைய் பயன்படுத்தி நிலத்தில் தோன்றும் பௌதிக. ரசாயன மற்றும் உயிரியல் இடர்களை சரி செய்து நிலைத்த மண் வளத்தை பெறுவதற்கு வேளாண் அறிவியல் நிலையத்தை அனுகலாம் என்றார்

The post வளத்தை மேம்படுத்தும் வண்டல் மண்: நீர் பற்றாக்குறையான வயலிலும் மகசூல் பார்க்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: