100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி 11,000 சதுர அடியில் கோலம்: கொளத்தூர் எவர்வின் பள்ளி அசத்தல்

பெரம்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து, ஒரு விரல் புரட்சி என்ற தலைப்பில், பள்ளி வளாகத்தில் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 50 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ரங்கோலி கோலம் வரையப்பட்டு, அதனை சுற்றி நின்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தினர்.

மேலும் தேசியக்கொடி மீது வாக்குப்பதிவு செய்யும் விரல் பிரமாண்டமாக வரையப்பட்டிருந்தது. இந்திய வரைபடம் மீது வாக்குப்பதிவு விரல், வாக்குப்பதிவு இயந்திரம், இந்திய நாடாளுமன்றம் என ஆங்காங்கே பெரிய வடிவிலான கோலங்களையும் அமைத்து இருந்தனர்.  மேலும், ஒருவிரல் புரட்சி, நம் ஓட்டு நம் பிரதமர், ஓட்டு போடுங்கள் கேள்வி கேளுங்கள், 100% வாக்குப்பதிவு போன்ற வாசகங்களும் இதில் இடம்பெற்றன.

25 ஆசிரியைகள் தங்கள் முகங்களில் வாக்குப்பதிவு தொடர்பான ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏப்ரல் 19ம் தேதி அனைவரும் ஓட்டு போட வேண்டும் என அச்சிடப்பட்ட ராட்சத பலூன் பள்ளி வளாகத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துசாமி, திருவிக நகர் மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார், எவர்வின் பள்ளி குழுமத்தின் சி.இ.ஓ மகேஸ்வரி மற்றும் மூத்த பள்ளி முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* பதாகைகளை ஏந்தி பேரணி
பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள செயின்ட்தாமஸ் செவாலியர் மகளிர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று சுமார் 500 மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். மாதவரம் நெடுஞ்சாலை பல்லவன் சாலை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பேரணி சென்றது.

வழிநெடுகிலும் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து மாணவிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துசாமி, திருவிக நகர் மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார், உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி 11,000 சதுர அடியில் கோலம்: கொளத்தூர் எவர்வின் பள்ளி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: