தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய ஊழல்: நிர்மலா சீதாராமன் கணவர் பாய்ச்சல்

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் கூறும்போது,’ தேர்தல் பத்திர ஊழல் என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ஊழல். இந்த ஊழல் பொது மக்களிடம் அதிவேகமாக சென்றடைய துவங்கிவிட்டது. தேர்தல் பத்திர விவகாரம் விரைவில் பூதாகாரமாக உருவெடுக்கும். தேர்தல் பத்திர ஊழல் பகிரங்கமான பிறகு, இப்போது சண்டை இரண்டு தனித்தனி கூட்டணி கட்சிகளுக்கு இடையே இல்லை.

ஆனால் பாஜ மற்றும் இந்திய மக்கள் இடையே தான் நடக்கிறது. பாஜவை இந்த தேர்தலில் இந்திய மக்கள் தண்டிப்பார்கள்’ என்றார்.  இதை காங்கிரஸ் கட்சியின் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில்,’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் உண்மையைப் பேசியுள்ளார். அதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர் நேர்மையான, உறுதியான நபர். அதனால்தான் அவர் இதைச் சொல்ல முடியும். காங்கிரஸில் உள்ள நாங்களும், ராகுல் காந்தியும் இதைத்தான் நீண்ட காலமாக கூறி வருகிறோம். தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தேர்தல் பத்திரங்கள் பணம் பறிப்பதற்கான முறையான வழி என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்’ என்றார்.

The post தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய ஊழல்: நிர்மலா சீதாராமன் கணவர் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: