மதுரை: மதுரை வைகை ஆற்று வெள்ளத்தில் தாயுடன் சிக்கித் தவித்த நாய்க்குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக மதுரை வைகையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலை மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வைகை ஆற்று பாலத்தின் அருகே இருந்த மணல் திட்டில் ஒரு நாய், தனது குட்டியுடன் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்தது. தான் மட்டும் தப்பி வந்து விடலாம் என்றபோதும், குட்டியை பிரிந்து வர மனமின்றி தாய் நாயும், மணல் திட்டிலேயே குரைத்தபடியே பல மணிநேரம் நின்றிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரியார் பஸ் நிலைய தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் பாலத்திலிருந்து, கயிற்று ஏணி மூலம் மணல் திட்டில் இறங்கினர். தனது குட்டியை காப்பாற்ற ஆட்கள் வந்து விட்டார்கள் என்ற நம்பிக்கையில், தாய் நாய் ஆற்றில் குதித்து பாலத்தின் அருகாமையில் மேடான பகுதியை ஒட்டிய தண்ணீரில் சிறிது தூரம் நீந்தி கரையை வந்தடைந்தது. குட்டி மீட்கப்படுவதை கடைசி வரையிலும் கரையிலிருந்தே பார்த்த அந்த நாய், வீரர்கள் குட்டியை மீட்டு கரையில் விட்டதும், வாலை ஆட்டி நன்றி காட்டியபடி தன் குட்டியுடன் கிளம்பிச் சென்றது….
The post வைகை வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டி மீட்பு: கரை சேரும் வரை காத்திருந்த தாய் நாய் appeared first on Dinakaran.