நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல் விலையை குறைக்கவில்லை: ஒன்றிய அரசுக்கு எதிராக எடப்பாடி திடீர் பேச்சு

நாகர்கோவில்: டீசல் விலையை குறைக்க நாங்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினோம். ஆனால் டீசல் விலையை அவர்கள் குறைக்கவில்லை என்று எடப்பாடி தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து, நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று மாலை அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: குமரி மாவட்டத்தில் வேளாண், மீன்பிடி, சுற்றுலா ஆகியவை பிரதான தொழிலாக உள்ளன. இந்த தொழில்கள் சிறக்க அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள். நான் விவசாயி என்பதால் அவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். விளைபொருட்களுக்கு விலை கிடைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ரப்பர், தென்னை, வாழை, நெற்பயிர்கள் இங்கு அதிகமாக உள்ளன. விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அது ஒன்றிய அரசால் தான் முடியும். அதிமுக வெற்றி பெற்றால் இதை வலியுறுத்துவோம்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை காங்கிரஸ் மற்றும் பாஜவிற்கு வாக்களித்து இருக்கிறீர்கள். இந்த முறை மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பசிலியான் நசரேத்தை வெற்றி பெற வையுங்கள். மீனவ மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் அவர் பேசுவார். பெட்ரோல், டீசல் விலை ஏறியதால் உணவுப் பொருட்களின் விலை ஏறுகிறது. அதிக எம்.பி.க்களை பெற்று அதிமுக வெற்றி பெற்றால் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்வோம். டீசல் விலையை குறைக்க நாங்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினோம். ஆனால் டீசல் விலையை அவர்கள் குறைக்கவில்லை. நாகர்கோவில்-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற அதிமுக நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல் விலையை குறைக்கவில்லை: ஒன்றிய அரசுக்கு எதிராக எடப்பாடி திடீர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: