திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

* யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
* 1752-ல் இங்கு தங்கியிருந்த பிரெஞ்சு தளபதி ஒருவர், ஜம்புகேஸ்வரர் குறித்து அரிய நூல் ஒன்றை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார்.
* காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீ சக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
* மூன்றாம் பிராகாரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருங்கிணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பத்தை தரிசிக்கலாம்.
* குறத்தி மண்டபம் எனும் குறை தீர்த்த மண்டபத்தில் நடன மங்கையர், குறி சொல்லும் குறத்தி போன்றோரின் சிற்பங்கள் அழகு மிளிர காட்சி தருகின்றன.
* இத்தலத்தில் 108 பிள்ளையார்கள் அருள்கின்றனர். அதில் அகிலாண்டேஸ்வரி சந்நதியில் உள்ள பிரசன்ன விநாயகரும், தனிச் சந்நதி கொண்டருளும் வல்லப விநாயகரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
* அம்மன் சந்நதியின் பின்பக்கமுள்ள ஆயிரங்கால் மண்டபத் தூண் ஒன்றில் தொந்தியில்லாத, புலிக்காலுடன் கூடிய வியாக்ர விநாயகரை தரிசிக்கலாம்.
* இத்தல ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ரிஷபகுஞ்சர சிற்பம் விசேஷமானது. காளையைக் காணும்போது யானையும், யானையைக் காணும்போது காளையும் தெரியாது.
* வீணை இல்லா சரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக விநாயகர் போன்றோரும் இத்தல சிறப்பு மூர்த்திகள்.
* ஜம்புகேஸ்வரர் சந்நதிக்கு அருகில் நின்ற நிலையில் விஸ்வரூப மகாலட்சுமியையும், இரண்டு தேவியருடன் சந்திரனையும், இரண்டு நந்தி தேவர்களையும் தரிசிக்கலாம்.
* இங்கு எழுந்தருளியுள்ள சனி பகவான், பால சனியாக குதிரை முகத்துடன் அன்னை சாயா தேவி மற்றும் மனைவியுடன் காட்சி தருகிறார்.
* வெள்ளை நாவல் பழம் பழுக்கும் வெண் நாவல் மரம் தல விருட்சம்.
* 20 கோஷ்ட தேவதைகளைக் கொண்ட சிவன் சந்நதி உள்ளது இந்தத் தலம் ஒன்றில்தான்.
* கருவறைக்கு முன்பாக ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் உள்ளது. இதன் வழியாக மூலவரை தரிசிப்பதே சிறப்பு.
* பிரசன்ன விநாயகர் சந்நதி சேர்த்து அகிலாண்டேஸ்வரி சந்நதி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இச் சந்நதியை தினம் 12 முறை 48 நாட்கள் வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும்.
* அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது.
* 51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. பௌர்ணமி தோறும் அகிலாண்டேஸ்வரி சந்நதியில் உள்ள மஹாமேருவிற்கு நவாவரண பூஜை நடக்கிறது.
* இத்தலத்தில் 5 மணி நேரம் தங்கி அகிலாண்டேஸ்வரியின் மந்திரங்களை உச்சரித்து வந்தால் எடுத்த காரியங்கள் வெற்றியடையும் என்பது சித்தர்கள் வாக்கு.
* உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம்.
* அகிலாண்டேஸ்வரியின் அருள்பெற்ற, மடப்பள்ளியில் பணியாற்றிய சிப்பந்தியே கவி காளமேகம் எனும் புலவராக பெயரும் புகழும் பெற்றார்.

The post திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி appeared first on Dinakaran.

Related Stories: